அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது 75 நாளுக்கான உணவின் பில் தொகை ரூ.1.17 கோடி என மருத்துவமனை தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. இதற்கு இன்று பதில் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா குடும்பம்தான் ஒரு கோடி ரூபாய்க்கு சாப்பிட்டது எனக் கூறியிருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காததால் அவருக்கு மரணம் ஏற்பட்டது.
ஏறக்குறைய 75 நாள்கள் அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பெற்றதற்கான செலவுத் தொகையை நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளது அப்பல்லோ நிர்வாகம்.
அப்போலோ மருத்துவமனை சார்பில் வழக்கறிஞர்கள் இந்த அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்காக மொத்தம் ரூ.6.85 கோடி செலவானது.
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டபோது 75 நாள்களில் உணவுக்காக ரூ.1.17 கோடி செலவாகியுள்ளது. லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலேவுக்குக் கட்டணமாக 92.07 லட்சமும், ஜெயலலிதாவுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளித்த சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கட்டணமாக ரூ.1.29 கோடியும் செலவாகியுள்ளது.
75 நாள்கள் ஜெயலலிதா தங்கியிருந்த அறையின் வாடகை ரூ.24.19 லட்சம் என்றும், அதே நாள்களில் சசிகலா உள்ளிட்டோர் தங்கிய அறையின் வாடகை கட்டணமாக 1.24 கோடி செலவாகியுள்ளது. மொத்தக் கட்டணமான இந்த ரூ.6.85 கோடியில் ரூ.44.56 லட்சம் பாக்கி தர வேண்டியிருக்கிறது' என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
75 நாட்களாக சாப்பிட்ட இட்லிக்கு ஒரு கோடி ரூபாய் பில் வருமா என சமூக ஊடகங்களில் ட்ரோல் ஆகிக் கொண்டிருக்க, சாப்பிட்டது முழுக்க சசிகலா குடும்பம் எனப் பதில் கூறியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
உண்மையில், அந்த நேரத்தில் அப்பல்லோ மருத்துவமனையே மினி ரெஸ்டாரண்டாக மாறியிருந்தது எனக் கூறும் சசிகலா குடும்ப கோஷ்டிகள்,' தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக இருக்கும் வைரமுத்து, சசிகலா குடும்பத்துக்கும் மிகவும் நெருக்கமானவர்.
போயஸ் கார்டனில் இருக்கும் சமையல்காரர்கள் பலரும் வைரமுத்துவால் கொண்டு வரப்பட்டவர்கள். தஞ்சை கைப்பக்குவத்தில் சமைப்பதில் இவர்கள் வல்லவர்கள்.
ஜெயலலிதாவுக்கு மிகவும் பிடித்தமான பாதாம் அல்வா, இவர்களது கைப்பக்குவத்தில் அதீத ருசியைக் கொடுக்கும்.
ஆரம்ப நாட்களில் அப்பல்லோ கேண்டீனில் வாங்கிச் சாப்பிட்ட சசிகலாவுக்கும் இளவரசிக்கும் அலர்ஜியே ஏற்பட்டுவிட்டது.
எத்தனை நாள் இந்த நோய் சாப்பாட்டைச் சாப்பிடுவது என அப்பல்லோ ரெட்டியிடம் புலம்பியுள்ளனர். இதனையடுத்து, அப்பல்லோ தரைத்தளத்திலேயே திடீர் கிச்சன் ஒன்று முளைத்தது.
போயஸ் கார்டன் சமையலர்கள் அத்தனை பேரும் வரவழைக்கப்பட்டனர். அங்கிருந்துதான் மூன்று வேளையும் உணவு தயாரானது. காலையில் இட்லி, பொங்கல், மதியம் விதம்விதமான உணவுகள் என அப்பல்லோ ஹிஸ்டரியிலேயே இல்லாத அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
இந்த வகையில் தினம்தோறும் நூறு பேருக்கும் சாப்பிட்டனர். அதனால்தான் இவ்வளவு தொகைகள் செலவானது' என்கின்றனர்.
-அருள் திலீபன்