பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக பா.ம.க., கூட்டணி குறித்து யாரிடமும் பேச தொடங்கவில்லை. தேர்தல் அறிவித்த பின்னர் எங்கள் நிலைப்பாட்டை கூறுவோம். எங்களது கொள்கைகளுக்கு ஒத்துவரக் கூடிய கட்சிகளோடு கூட்டணி வைப்போம்' எனத் தொடர்ந்து கூறி வருகிறார் அன்புமணி. கூட்டணியைவிடவும் காடுவெட்டி குருவின் ஆட்கள் முன்னெடுக்கும் பிரசாரத்தால் கதிகலங்கிப் போய் இருக்கிறார் ராமதாஸ்.
தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. திமுக தலைமையில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள் ஆகியோர் ஒன்று சேர்ந்துள்ளன.
பிஜேபி, பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்குப் போக்கிடம் கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் எடப்பாடி அண்ட் கோவுடன் பாமக பேசத் தொடங்கிவிட்டது எனத் தகவல் கிளம்பியது.
' 5 தொகுதி கன்பார்ம்..ஒரு ராஜ்யசபா சீட் என அதிமுகவோடு அணியை உறுதிப்படுத்திவிட்டார் அன்புமணி' என அதிமுகவினர் பேசத் தொடங்கினர். இந்தத் தகவல் வடபுலத்தைச் சேர்ந்த அதிமுக அமைச்சர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
ராமதாஸ் அணிக்குள் வந்தால் தங்களுக்கான முக்கியத்துவம் கிடைக்காது. கூட்டணி முயற்சிகளைக் கேள்விப்பட்டு அதிமுக தலைமை நிர்வாகிகளிடம் பேசியவர்கள், 'நாம் செல்வாக்காக இருக்கக் கூடிய தொகுதிகளை எல்லாம் அன்புமணி கேட்பார். ஜெயலலிதா இருந்தபோதே நமக்கு வடமாவட்டங்களில் நல்ல ஓட்டுக்கள் கிடைத்துள்ளது.
அப்படியிருக்கும்போது பாமகவைத் தோளில் சுமந்துதான் ஆக வேண்டுமா? முதல்வர் பதவியில் எடப்பாடி இருப்பதை தரக்குறைவாக விமர்சித்தவர்கள் அவர்கள். ராமதாஸுக்கு ஆதாயம் வருகிறது என்றால் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்பார்.
அடிக்கடி நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார். இப்போது குருவின் சந்தேக மரணத்தால் வன்னிய மக்கள், ராமதாஸ் குடும்பத்தின் மீது கோபத்தில் உள்ளனர். அவர்களோடு சேர்ந்தால் நமக்கான வெற்றியும் பறிபோய்விடும்' எனக் கூறியுள்ளனர்.
அதேநேரம், தினகரனோடும் அன்புமணி பேசிக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
திமுக பொறுப்பாளர்களோ, ' எங்களோடும் கூட்டணி பற்றி அன்புமணி பேசினார்' என்கின்றனர். ஒரேநேரத்தில் 3 கட்சிகளுடன் கூட்டணி குறித்து அன்புமணி பேசிக் கொண்டிருப்பதை அதிர்ச்சியோடு பார்க்கிறார்கள் அரசியல் கட்சித் தலைவர்கள்.
இதைப் பற்றிப் பேசும் பாமக பொறுப்பாளர்கள், ' செல்வாக்காக இருக்கும் 5 தொகுதிகளில் போட்டியிடும் முடிவில் ராமதாஸ் இருக்கிறார். மறுபடியும் திமுக, அதிமுக என சவாரி செய்தால் வன்னிய மக்கள் நம்மை நம்ப மாட்டார்கள். தனித்துப் போட்டியிடுவோம் என அன்புமணியிடம் பேசியிருக்கிறார்.
அன்புமணியோ, தனித்துப் போட்டியிட்டால் வெற்றி வந்து சேராது. தருமபுரியில் நாம் ஜெயித்தாக வேண்டும். அதற்கு நல்ல கூட்டணி அமைந்தால்தான் முடியும். 2014 தேர்தலில் மோடி, விஜயகாந்த் எனக் கூட்டணி சேர்ந்ததால்தான் என்னால் எம்பி ஆக முடிந்தது' என எகிறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் அப்பா, மகனுக்கும் இடையே மோதல் முற்றியிருக்கிறதாம்.