'திமுக தலைவர் கருணாநிதி, 2004 ம் ஆண்டு, 'இந்திராவின் மருமகளே வருக, இந்தியாவில் நல்லாட்சி தருக என்று அன்னை சோனியா காந்தியை பார்த்து சொன்னார். இப்போது நான் சொல்கிறேன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியே வருக, இந்தியாவுக்கு நல்லாட்சி தருக. நான் தமிழ் நாட்டிலிருந்து ராகுல் காந்தியின் பெயரை இந்தியாவின் பிரதமர் பதவிக்கு முன் மொழிகிறேன்.
இந்தியாவை காப்பாற்ற கூடிய வல்லமை அவருக்கு இருக்கிறது என்று நம்புகிறேன். பாசிச, நாசிச மோடி அரசை வீழ்த்தக் கூடிய வல்லமை உங்களுக்கு (ராகுல் காந்தி) இருக்கிறது என்று நான் நம்புகிறேன்' என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு பிறகு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முழங்கினார் மு.க.ஸ்டாலின்.
அவர் பேசிய அந்த மேடையில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.ராஜா, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. டி.கே. ரங்கராஜன் ஆகியோரும் இருந்தனர். பிரதமர் பதவிக்கு ராகுல் என்ற ஸ்டாலினின் முழக்கம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் இந்த விவாதத்துக்கு சோனியா காந்தி எந்தப் பதிலும் சொல்லவில்லை.
அவரைப் பொருத்தவரையில் திமுக அணியில் காங்கிரஸ் இருக்க வேண்டும் என்பதுதான்.
இதற்காக ஸ்டாலின் வைத்த நிபந்தனைகளையெல்லாம் ஏற்றுக் கொண்டாலும், சீட் விஷயத்தில் கறாராக இருக்கிறாராம் சோனியா.
'தேர்தலுக்குப் பிறகு நம்மை நம்பித்தான் ஸ்டாலின் வந்தாக வேண்டும், அதனால் சீட்டுகளை தாராளமாகக் கேட்போம்' எனக் கூறியிருக்கிறார் ராகுல். இரட்டை இலக்கத்தில் சீட் கொடுக்க வேண்டும் என திமுகவிடம் அவர்கள் கேட்டிருக்கிறார்கள்.
இதில் 12 தொகுதிகள் வரையில் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுக்க இருக்கிறார்களாம். 'இத்தனை இடங்களைக் கொடுப்பது தவறு. ஐந்து சீட்டே அவர்களுக்கு அதிகம்' என துரைமுருகன் போன்ற சீனியர்கள் பேசி வருகிறார்களாம்.
இருப்பினும், இந்த விஷயத்தில் ஸ்டாலின் இறங்கி வரவில்லையாம். அப்பா மரணத்துக்குப் பிறகு தேசிய அளவில் நாம் கவனத்தைப் பெற்றிருக்கிறோம். கூடுதல் இடங்களைக் கொடுப்பதில் தவறு இல்லை எனப் பேசி வருகிறாராம்.
இந்த 12 இடங்களில் ஒரு சில இடங்கள் குறைந்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள் ஸ்டாலினின் குடும்ப கோஷ்டிகள்.