மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்துவிட்டு வந்த சில நாட்களில் திருவாரூர் தொகுதிக்குத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தேர்தல் தேதி அறிவிப்பின் பின்னணியில் அதிமுக இருக்கிறது என்கிறார்கள் அக்கட்சி பொறுப்பாளர்கள்.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிலுவையில் உள்ள மானியத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், 2017–18–ம் ஆண்டு செயல்திறன் மானியமாக ரூ.560.15 கோடியும், நகர்ப்புற மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான 2018–19–ம் ஆண்டுக்கான அடிப்படை மானியம் ரூ.3,216.05 கோடியும் வழங்கவேண்டியது நிலுவையில் உள்ளது.
தமிழக மக்களுக்கு அடிப்படை வசதிகளை கூட வழங்குவதற்கு நிதி இல்லாமல் தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தவித்து வருகின்றன. எனவே இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிட்டு நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியம் மற்றும் செயல்திறன் மானியம் ஆகியவற்றை மத்திய நிதி குழு ஒப்புதல் அளித்து விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்' எனக் கூறியிருந்தனர்.
இந்த சந்திப்புக்குப் பிறகு பேட்டி கொடுத்தார் தமிழ்நாடு மின்துறை மந்திரி தங்கமணி. அப்போது, நிதி தொடர்பான கோரிக்கை வைக்க நிதித்துறை மந்திரி இருக்கும்போது, ராணுவ மந்திரியை சந்திக்க காரணம் என்ன? என்ற கேள்விக்குப் பதில் கூறும்போது, உங்களது கண்ணோட்டமே தவறு. நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டை சேர்ந்தவர். கஜா புயலால் தமிழ்நாட்டு மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அதனால் அதற்கு தேவையான நிதியை பெற்றுத்தருமாறு தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்ற முறையில் அவரை சந்தித்தோம். இதில் என்ன தவறு இருக்கிறது? என்றார்.
இந்த சந்திப்பே இடைத்தேர்தல் நடத்துவது தொடர்பாகத்தான்' எனக் கூறும் அதிமுகவினர், ' தேர்தலுக்குப் பிறகு பிஜேபியை ஆதரிக்கும் முடிவில் இருக்கிறார் எடப்பாடியார். இந்தத் தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் கூட்டு சேர்ந்துவிட்டதால், அந்த அணியை பலவீனப்படுத்தும் முடிவில் இருக்கிறது பிஜேபி.
அதிமுகவும் இதே மனநிலையில்தான் இருக்கிறது. ஆளும்கட்சியாக இருப்பதால் ஓட்டுக்குப் பெருமளவு பணத்தைக் கொடுத்து வெற்றி பெற்றுவிடலாம் எனவும் நினைக்கிறார்கள். பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஆளும்கட்சிக்கு ஒரு வெற்றி தேவைப்படுகிறது. 'பொதுத்தேர்தலோடு இடைத்தேர்தல் வந்தால் ஸ்டாலின் அணி வெற்றி பெறும்.
அதற்கு முன்னதாக இடைத்தேர்தல் வந்தால் ஆளும்கட்சிக்கு வாய்ப்பு அதிகம். ஸ்டாலின் அணியும் சோர்ந்து போய்விடும்' என நிர்மலாவி சீதாராமனிடம் கூறியிருக்கிறார் வேலுமணி. அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்த்துத்தான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது' என்கின்றனர்.
-அருள் திலீபன்