திருவாரூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் அதிர்ச்சியோடு இருக்கிறாராம் ஸ்டாலின். நம்மை பழிதீர்க்கவே பிஜேபி இப்படிச் செய்கிறது எனக் கட்சி நிர்வாகிகளிடம் ஆத்திரத்தை வெளிப்படுத்தினாராம்.
'திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதிகளோடு காலியாக இருக்கும் 20 தொகுதிகளுக்குமான தேர்தல் பாராளுமன்றத் தேர்தலோடு தள்ளிப் போகலாம்' என்றுதான் திமுகவினர் நினைத்து வந்தனர். அதற்குத் தகுந்தார்போல, பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்களோடு அடிக்கடி ஆலோசனையும் செய்து வந்தார் ஸ்டாலின்.
இந்தநிலையில் திடீரென தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அவர் எதிர்பார்க்கவில்லை. அரசு இயந்திரம் பல கோடி ரூபாய்களை இறைத்து வெற்றி பெற முயற்சிக்கும், தினகரனும் செலவழிப்பார் என்பதால் கடும் குழப்பத்தில் இருக்கிறாராம் ஸ்டாலின். இதைப் பற்றி கி.வீரமணி மூலமாக கேள்வி எழுப்ப வைத்தார்.
இதுதொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட வீரமணி, ' 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிகள் காலியாக உள்ள நிலையில், திருவாரூர் தொகுதிக்கு மட்டும் அவசர இடைத் தேர்தல் ஏன்? பாதிக்கப்பட்டவர்களில் எவரும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு ஏதும் செய்யவும் இல்லை.
இந்நிலையில் அந்த தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தாமல் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூருக்கு மட்டும் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்புவதில் மட்டும் தனித்த அக்கறை காட்டுவதன் நோக்கம் தான் என்ன? திமுகவைப் பொறுத்தவரை என்றும் தேர்தலுக்குத் தயாராக இருப்பது நாடறிந்த உண்மையே.
20 தொகுதி இடைத் தேர்தல் என்பது எடைத் தேர்தல். 20 தொகுதிக்கு தேர்தல் வைக்காமல் இதற்கென்ன தனி அவசரம்' எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனல், இந்த அறிவிப்பு வெளியானதை நமுட்டுச் சிரிப்புடன் ரசிக்கிறார் பிஜேபி பொறுப்பாளர்கள். இடைத்தேர்தல் நடந்தால் ஆளும்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்.
இந்த ஒரு தொகுதியில் ஸ்டாலின் தோற்றுப் போனால் பாராளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையை முன்வைத்து தேர்தலை எதிர்கொள்ள மற்ற கட்சிகள் தயங்குவார்கள். ராகுல்காந்தி விசிட்டுக்குப் பிறகு குஷியில் இருந்த ஸ்டாலினுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறார் மோடி.
' உங்கள் பலம் இவ்வளவுதான்' என திருவாரூர் தேர்தல் மூலமாக ஸ்டாலினுக்கு நேரடியாக உணர்த்த இருக்கிறார்.
கருணாநிதி மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மெனக்கெட்டு வந்தார் நிதின் கட்கரி.
சமாதி விவகாரத்திலும் மத்திய அரசு எதிர்ப்பு காட்டவில்லை. எப்படியும் நம்பக்கம் ஸ்டாலின் வருவார் என நம்பிக் கொண்டிருந்தவர்களுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுவிட்டது. இந்தநேரத்தில் தேர்தல் தேதி அறிவித்தால், பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்குக் கடும் பின்னடைவு ஏற்படும் என நம்புகிறது பிஜேபி.
அதனால்தான், இடைத்தேர்தல் மூலமாக ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்கள். `வீரமணி சொல்லும் ரகசியமும் இதுதான்' என்கிறார்கள் தாமரைக் கட்சி பொறுப்பாளர்கள்.
-அருள் திலீபன்