திகார் சிறையில் தினகரன் கம்பி எண்ணிக் கொண்டிருந்தபோது, ஊர் ஊராக தொண்டை கிழியப் பேசிக் கொண்டிருந்தார் நாஞ்சில் சம்பத். இப்போது மீண்டும் பெங்களூரு புகழேந்தியோடு கைகோர்த்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமமுகவைத் தொடங்கியபோது, அந்தக் கட்சியின் பெயரில் திராவிடம் என்ற பெயர் இல்லாததால் விலகுகிறேன் எனக் கூறியிருந்தார் சம்பத். இதைப் பற்றி மேலும் பேசிய அவர், காலம் காலமாக எந்த கொள்கையை பேசி வந்தேனோ, காலங்காலமாக எந்த கொள்கையை எங்கெல்லாம் கொண்டு சென்றேனோ அந்த கொள்கையை ஒரு பகலில் படுகொலை செய்துவிட்டார் தினகரன். இன உணர்வு கொள்கையை கொட்டிக் கவிழ்த்து விட்டார் தினகரன். அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இந்த பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை, டிடிவி அறிவித்த கட்சி பெயரில் அண்ணாவும், திராவிடமும் இல்லை இனிமேல் அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டுகிடக்க மாட்டேன்.
இனி எந்த கட்சிக்கொடியையும் தூக்கி சுமக்க மாட்டேன். எந்த தலைவனையும் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன். இனி தனிப்பறவையாக பறப்பேன். என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது. என்னை யாரும் நெருங்க முடியாது. கரையான்கள் நெருப்பை அரிக்க முடியாது. என் மூளையைச் சலவை செய்ய எந்த முட்டாளும் முயல வேண்டாம். அடுத்தக்கட்டமாக இலக்கிய பணியை செய்வேன், இனி இளைஞர்களுக்கு பேச்சுப்பயிற்சி அளிக்க உள்ளேன்' என்றார்.
சொன்னதுபோலவே, எந்த அரசியல் மேடையிலும் அவர் தலைகாட்டவில்லை. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவை மாவட்ட அமமுக பொருளாளரின் திருமண விழா நடந்துள்ளது. கோவையில் நடந்த இந்த விழாவில், ஒரே மேடையில் நின்று வாழ்த்துரை வழங்கியுள்ளனர் நாஞ்சில் சம்பத்தும் புகழேந்தியும். அமமுக மேடையில் மீண்டும் சம்பத் ஏறியதை ஆச்சரியத்தோடு பார்த்துள்ளனர் கட்சித் தொண்டர்கள். ' நட்புக்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கு வந்தேன். மற்றபடி, அமமுகவில் சேரும் முடிவில் இல்லை' எனக் கூறினாராம் நாஞ்சில் சம்பத்.