ஜெயலலிதா மரணத்தில் உண்மைகளை மறைப்பதாகவும், தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் மீது அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டாக புகார் செய்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி கமிஷன் விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோ சிகிச்சை வழங்கப்படாதது, வெளிநாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாதது குறித்து சுகாதார செயலர் ராதாகிருஷ்ணன் மீது சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் பகிரங்க குற்றச்சாட்டுகளை தெரிவித்தார். யாரோ சிலரின் பின்புலத்தில் செயல்பட்டு உண்மைகளை மறைப்பதாகவும் ராதாகிருஷ்ணன் மீது புகார் செய்ததுடன் அவரிடம் சிறப்பு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் சண்முகம் வலியுறுத்தி இருந்தார்.
இதனை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரும் ஆமோதித்து, போலீஸ் காவலில் வைத்து உரிய முறையில் விசாரிக்க வேண்டும் என கூறியிருந்தார். ராதாகிருஷ்ணன் மீதான அமைச்சர்களின் குற்றச்சாட்டால் தமிழக ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி தூக்கியது. அமைச்சர்களை அடக்கி வைக்க வேண்டும் என ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் முதலமைச்சரிடம் கடிதம் கொடுத்தனர். இந்நிலையில் அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் நேற்று சேத்தியாத் தோப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில், சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகவும், ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அரசின் இதயம் போன்றவர்கள் என்று உயர்த்திப் பேசினார். அத்துடன் தமிழக அமைச்சர்களையும் தினகரன் சரமாரியாக விளாசியுள்ளார்.
தினகரனின் பேச்சால் அதிமுக தரப்பு வெகுண்டெழுந்துள்ளது. இன்று காலை சட்டசபை வளாகத்தில் அதிமுக எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் திரண்டு செய்தியாளர்களைச் சந்தித்தனர். கடலூர் அதிமுக எம்.பி.அருண்மொழித்தேவன், தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணன் யாருடைய பின்புலத்தில் செயல் படுகிறார் என்பது பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது என்பது போல் அம்பலமாகி விட்டது. ஐ.ஏ.எஸ்.அ திகாரிகளைத் தூண்டி விட்டு தினகரன் தமிழக ஆட்சிக்கு எதிராக கலகமூட்டுகிறார் என்று குற்றம் சாட்டினார். மேலும் ராதாகிருஷ்ணன் பொய்யான தகவல்களை கூறுவது ஏன்? .
அப்போலோவில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டது முதல் இறக்கும் வரை நடந்ததை தானாக முன் வந்து ராதாகிருஷ்ணன் தெரிவிக்க வேண்டும் என்றார். தொடர்ந்து மற்ற எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் மீதும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் மீதும் சரமாரி குற்றச்சாட்டுகளை அள்ளி வீசினர். அதிமுக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களின் இந்தப் புகாரால் தமிழக அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.