திருவாரூர் தேர்தல் ரத்து: ஸ்டாலின், தினகரனை மோதவிட்டு மோடி நடத்திய டிராமா!

BJP gains from Thiruvarur by election cancel

Jan 8, 2019, 13:11 PM IST

திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதை மகிழ்ச்சி பொங்கப் பார்க்கிறார்கள் பாஜக பிரமுகர்கள். 'தினகரனும் ஸ்டாலினும் ஒன்று சேர்ந்துவிடக் கூடாது என மோடி நினைத்தார். அது நடந்துவிட்டது' எனப் பேசி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம், திருவாரூர் உட்பட 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்த்தன அரசியல் கட்சிகள். ஆனால் திருப்பரங்குன்றம் தொகுதி தொடர்பாக திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட டாக்டர் சரவணன் தொடர்ந்த வழக்கு கோர்ட்டில் இருப்பதாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாலும் 19 தொகுதிகளின் தேர்தலை சற்று தாமதித்து நடத்துவதற்கு முடிவு செய்தது தலைமை தேர்தல் கமி‌ஷன்.

இதையடுத்து திருவாரூர் தொகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்த நிலையில், திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்திவைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

மேலும் இடைத்தேர்தல் பணிகளை நிறுத்துமாறு தமிழக தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கஜாபுயல் நிவாரணப் பணிகள் முடியாததால் திருவாரூரில் தேர்தலை ஒத்திவைக்குமாறு அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்திருந்தன. திருவாரூர் தேர்தலுக்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

தேர்தல் கமிஷனின் அறிவிப்பால் பாஜக பொறுப்பாளர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதைப் பற்றிப் பேசும் அவர்கள், ' தமிழக அரசியல் சூழலில் திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் வலுவான கூட்டணியாகத் தென்படுகின்றன. இந்தக் கூட்டணிக்குள் கமல்ஹாசன் இணையலாம் என்கின்றனர்.

சசிகலா நிர்பந்தத்தால் தினகரனும் காங்கிரஸ் அணிக்குள் இணைவார் எனப் பேசி வந்தனர். அப்படி இந்தக் கூட்டணிக்குள் தினகரன் போய்விட்டால், பாஜகவுக்கு மேலும் சிக்கல் ஏற்படும். அதற்குப் பதிலாக எதிர்ப்பு வாக்குகள் தினகரன், எடப்பாடி, ஸ்டாலின் எனப் பிரியும் போது காங்கிரஸ் அணிக்கு மரண அடி விழும். இதை எதிர்பார்த்து திருவாரூர் தேர்தல் தேதியை அறிவித்தார்கள்.

மோடி எதிர்பார்த்தது போலவே, தினகரனும் ஸ்டாலினும் கடுமையாக மோதிக் கொண்டனர். இனி இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து தேர்தலை எதிர்கொள்வதற்கு வாய்ப்பில்லை. திமுக அணிக்குள் தினகரன் போகப் போவதில்லை. கமல் வருகையை காங்கிரஸ் எதிர்பார்ப்பதை அறிந்து, எங்கள் கூட்டணிக்குள் கமல் வரலாம் எனப் பேசினார் மோடி. சொல்லப் போனால், திருவாரூர் தேர்தல் ரத்து அறிவிப்பின் மூலம் மோடி தான் ஆதாயம் அடைந்திருக்கிறார்' என்கிறார்கள்.

- அருள் திலீபன்

 

You'r reading திருவாரூர் தேர்தல் ரத்து: ஸ்டாலின், தினகரனை மோதவிட்டு மோடி நடத்திய டிராமா! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை