முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்ட மசோதாவை மோடி அரசு நேற்று கொண்டு வந்தபோது பாராளுமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி அதை எதிர்க்காதது ஏன்? பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்காக சமூக நீதியைப் பலியிடுகிறார்களா? என்னும் கேள்வி எழுகிறது எனத் தெரிவித்திருக்கிறார் திருமாவளவன்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்னேறிய வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் முடிவை மத்திய அமைச்சரவை எடுத்தவுடன் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் மத்திய அரசின் முடிவை அவர் கண்டித்துள்ளார்.
அதைப் பார்த்ததும் பாராளுமன்றத்தில் இதற்கான சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படும் போது நிச்சயமாக அவர் அதை எதிர்த்துப் பேசுவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலானோர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த சூழலில் அந்த மசோதா மீது பாமக என்ன கருத்தைத் தெரிவிக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்தது.
ஆனால், பாராளுமன்றத்தில் எதிர்த்துப் பேசாததன்மூலம் அந்த மசோதாவுக்கு மறைமுக ஆதரவு அளித்தது ஏன்? சமூகநீதியை வலியுறுத்தி அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையிலும்கூட முரண்பாடு உள்ளது.
”இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் அடிப்படை நோக்கம் ஆண்டாண்டு காலமாக சமூக அடிப்படையில் அடக்கி ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த மக்களை கைதூக்கி விடுவதுதான்” என அறிக்கையின் முற்பகுதியில் குறிப்பிட்டுள்ள அன்புமணி, அதே அறிக்கையின் இறுதியில் ”சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்தி அனைத்து சமுதாயத்தினருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப 100% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இடஒதுக்கீடு பற்றி அவருக்குள்ள குழப்பத்தையே இது காட்டுகிறது. சமூக அடிப்படையில் ஒடுக்கி வைக்கப்பட்டிருந்தவர்களைக் கைதூக்கிவிடுவதற்குத்தான் இடஒதுக்கீடு என்னும்போது அந்த ஒடுக்குமுறையைச் செய்துவரும் முன்னேறிய சாதியினருக்கும் எவ்வாறு அதை வழங்க முடியும் ?
அப்படி முன்னேறிய சாதியினருக்கும் வழங்கவேண்டும் என்பதுதானே பாஜகவின் நிலைபாடு. அதற்கும் பாமகவுக்கும் என்ன வேறுபாடு?
எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் உடனுக்குடன் அறிக்கை விடுவதில் கவனம் செலுத்தும் மருத்துவர் ராமதாஸ் இந்தப் பிரச்சனையில் பாஜக அரசைக் கண்டித்து அறிக்கை விடாதது ஏன்? அன்புமணி விடுத்த அறிக்கையே போதுமென்று மௌனம் காக்கிறாரரா?
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதற்கு இதனால் எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதுதானே அவருடைய மௌனத்துக்குக் காரணம்?
உண்மையிலேயே சமூக நீதியின் மீது அக்கறை இருந்திருந்தால் இட ஒதுக்கீட்டுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் பாஜகவின் மோசடியை எதிர்த்து பாமக பாராளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டாமா?.
அதைச் செய்யாமல் மோடி அரசின் மோசடிக்கு மறைமுக ஆதரவு அளித்ததன்மூலம் அரசியல் ஆதாயத்துக்காகத்தான் சமூக நீதி பற்றி பாமக பேசுகிறது என்பது அம்பலமாகியுள்ளது. இந்த ’நாடக அரசியலை’ பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.