கொடநாடு எஸ்டேட் மர்மங்களின் பின்னணியில் எடப்பாடி இருப்பதாகப் பேட்டி வெளியாகியுள்ளது. இந்தப் பேட்டியின் மூலம், அதிமுகவில் இணைந்த கைகளாக இருப்பவர்கள் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாம்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளியாக பணியாற்றி வந்த ஓம் பகதூர் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியான கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நடைபெற்ற விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது சக கூட்டாளியான சயன், கேரளாவுக்குக் காரில் சென்றபோது பாலக்காடு அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.
இந்தக் கோர விபத்தில் சயனின் மனைவி வினுப்பிரியா, மகள் நீது ஆகியோர் உயிரிழந்தனர். கொடநாடு கொள்ளையில் ஈடுபட்டதாக கூலிப்படையை சேர்ந்த சந்தோஷ், தீபு, சதீஷன், உதயகுமார், ஜிதின் ராய், ஜம்ஷே அலி, மனோஜ், ஜிஜின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, டெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ வெளியிட்ட தகவல், அதிமுக கூடாரத்துக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
மேத்யூ வெளியிட்ட ஆவணப்படத்தில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு பணமும், நகையும் இருந்தது புலனாய்வில் தெரிய வந்துள்ளதாக கூறினார். மேலும் அவர் வெளியிட்ட ஆவணப்படத்தில், ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்தபோது, கொடநாட்டில் இருந்த சில ஆவணங்களை எடுத்து வருமாறு ஓட்டுநர் கனகராஜ் என்னிடம் கூறினார்.
ஆவணங்களை முதல்வரிடம் தர வேண்டும் என்று கூறியதாகவும் கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய சயான் கூறியுள்ளார். ஆவணங்களை எடுத்து வரும் திட்டத்துக்காக ஓட்டுநர் கனகராஜ் ரூ.5 கோடி பெற்றார் எனவும் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆவணப்படத்தைத் தயாரித்தவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் அ.தி.மு.க நிர்வாகிகள்.
கொடநாடு சம்பவம் தொடர்பாகப் பேசும் அதிமுகவினர், ' இப்படியொரு வீடியோவை வெளியிட்டு எடப்பாடியை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கிவிட்டனர். அவரது பெயரைக் கெடுப்பதற்காகத்தான் இப்படியெல்லாம் செய்துள்ளனர். இணைந்த கைகளாக இப்போது இருப்பவர்கள் வெகுவிரைவில் பிரிய இருக்கிறார்கள். இணைந்த கைகளில் ஒரு கைதான் இந்த வீடியோவின் பின்னணியில் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக அவர்களில் சிலர் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். கட்சி நிர்வாகத்திலும் எடப்பாடியே ஆதிக்கம் காட்டுகிறார். இனியும் இந்த நிலைமை நீடித்தால், தென்மாவட்டத்தில் அரசியல் செய்ய முடியாது என சிலர் முடிவெடுத்துள்ளனர். கொங்கு டாமினேஷனைக் குறைக்கும் வகையில், இந்த சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர். இதன் நிஜப் பின்னணி விரைவில் வெளியாகும்' என்கிறார்கள்.
- அருள் திலீபன்