அலங்காநல்லூர், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பட்ட முட்டுக்கட்டைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்தது.
பொங்கலுக்கு மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் அடுத்தடுத்த நாட்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு உலகப் பிரசித்தம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தும் குழு அமைப்பதில் பிரச்னை ஏற்பட்டது. ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊரில் உள்ள அனைத்து சமுதாய பிரதிநிதிகளுக்கும் குழுவில் இடம் கேட்டு பிரச்னை கோர்ட்டுக்கு சென்றது.
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தனி அக்கறை எடுத்தும் சமரசம் ஏற்படாததால் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடக்குமா ?என்ற சந்தேகம் எழுந்தது. கடைசிக் கட்டமாக உயர்நீதிமன்றமே ஓய்வு பெற்ற நீதிபதி ராகவனை நீதிமன்ற ஆணையராக நியமித்தது உயர் நீதிமன்றம் . அனைத்து சமுதாயத்தினரும் இடம் பெறும்16 பேர் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டு சுமூகத் தீர்வும் எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகமும், ஜல்லிக்கட்டுக் குழுவும் தீவிரமாகியுள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகளை தயார் படுத்தும் பணிகளிலும் மாடுகளின் உரிமையாளர்கள் ஜரூ ராகி விட்டனர். காளைகளை அடக்கும் இளம் காளையர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தகுதி, மருத்துவச் சோதனைகளும் நடத்தப்பட்டது.