சாத்தூரை அடுத்துள்ள கோவில்பட்டியில் சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடையில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஜவுளிகள் எரிந்து நாசமடைந்தன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பஸ் ஸ்டாண்ட் அருகே பிரதான சாலையில் கண்ணப்பன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் சென்னை சில்க்ஸ் ஜவுளிக் கடை உள்ளது. இந்த ஷோரூமில் இன்று அதிகாலை 4 மணியளவில் திடீரென தீப்பிடித்தது.
கடையின் வாசலில் இருந்த செக்யூரிட்டிகள் உடனடியாக பார்த்ததால், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு போன் செய்தனர். கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திலிருந்து ஒரு வண்டி வந்து, வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீ கட்டுப்பாட்டுக்குள் வரவில்லை. இதன்பின், விளாத்திகுளம், கழுகுமலை ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டு 3 தீயணைப்பு வண்டிகள் மூலம் வீரர்கள் தீயை கட்டுப்படுத்தினர்.
ஆனாலும், கட்டிடம் முழுவதும் தீவிபத்தில் சேதமடைந்தது. சுமார் ரூ.2 கோடி ரூபாய் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசமானதாக நிர்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டது. கடையின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் தீப்பிடித்து நாசமாயின. மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, கோவில்பட்டி ஆர்.டி.ஓ. விஜயா, தாசில்தார் மணிகண்டன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர்.
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் 7 மாடி கட்டடத்தில் கடந்த 2017ம் ஆண்டு மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டது. அப்போது 7வது தளத்தில் பிடித்த தீ, 2வது தளம் வரை பற்றி ஏராளமான ஜவுளிகள், பொருட்கள் எரிந்து சாம்பலாகியது. நெரிசலான தி.நகரில் அந்த தீ பரவியிருந்தால், பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். எனினும், சுமார் ரூ.200 கோடிக்கு மேல் சேதமடைந்ததாக அப்போது சொல்லப்பட்டது.