அமெரிக்காவிலுள்ள மின்னசோட்டா மாகாணத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட அறிவியல் பொருட்காட்சியில், 50-க்கும் மேற்பட்ட படைப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
மின்னசோட்டா ‘டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன்’ சார்பில் ஆண்டுதோறும் பொருட்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டும் அறிவியல் பொருட்காட்சி நடைபெற்றது.
இதில், ‘டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன்’ சார்பில் நடத்தப்படும் டுவின் சிட்டீஸ் தமிழ் பாடசாலை என்ற பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று, தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்த அறிவியல் பொருட்காட்சியில், சோலார் சிஸ்டம், ரோபட், பேட்டரி கார், காந்தங்களைக் கொண்டு தாரிக்கப்பட்ட பொருட்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. இதில், மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பொருட்களைப் பார்த்து வியந்தனர்.
வியக்கவைக்கும் இந்த சிறப்பான தொழில் நுட்பத் தயாரிப்புகளை பரிசுகளுக்காக மதிப்பீடு செய்ய, காக்னிசன்ட் நிறுவனத்தைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
இவர்கள் ஒவ்வொரு பிரிவுகளின் கீழும் மூன்று பரிசுகளுக்கான படைப்புகளைத் தேர்வுசெய்தனர். இந்த நிகழ்சியை பேராசிரியர் குமார் மல்லிகார்ஜூனன் சிறப்பாக ஒருங்கிணைத்து, பரிசுகளை இறுதி செய்தார். மாணவர்கள் பரிசுகளைப் பெற்று மகிழ்ந்தனர்.
‘டுவின் சிட்டீஸ் தமிழ் அசோசியேசன்’ சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் பொருட்காட்சியின் மூலம், மாணவர்கள் தங்களின் திறனை வளர்த்துக் கொள்வதோடு, புதிய அனுபவங்களையும் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.