ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்திருக்குமானால், முன்னமே இது குறித்து தெரிவிக்காதது ஏன்? என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான், தனது முகநூல் பக்கத்தில் ஷமி பல பெண்களுடன் தகாத முறையில் தொடர்பு வைத்துள்ளதாக கூறி, அந்தரங்க விஷயங்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் முகநூல், வாட்ஸ்அப் சாட் விவரங்களை கசியவிட்டார்.
தனியார் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு ஹசின் ஜகான் அளித்துள்ள பேட்டியில், ஷமியின் இந்த கீழ்த்தரமான போக்கை தட்டிக் கேட்டதற்காக குடும்பத்தினர்களுடன் இணைந்து ஷமி தன்னை துன்புறுத்துவதாகவும், கொலை முயற்சி கூட நடந்ததாகவும் கூறினார்.
தொடர்ந்து, பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அலிஷபா என்ற பெண்ணிடம் பலமுறை பணம் வாங்கியுள்ளார். ஆனால் இந்த பணம் குறித்து கேள்வி கேட்கும் போதெல்லாம் பதில் கூறாமல் மழுப்பி விடுகிறார் என ஷமியின் மனைவி ஹசின் ஜகான் கூறியிருந்தார்.
மேலும், “மனைவியான என்னை ஏமாற்றும் போது நாட்டை ஏன் ஏமாற்றி இருக்க மாட்டார். இந்த பணம் சூதாட்டத்துக்காக (மேட்ச் பிக்சிங்) கொடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். துபாய் ஹோட்டலில் ஷமி பணம் வாங்கியதற்காக ஆதாரம் என்னிடம் இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மனைவியின் புகாரால் பிரச்சனை ஆளாகியிருக்கும் முஹமது ஷமிக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், “எனக்கு தெரிந்தவரை முகமது ஷமி மிகவும் பண்பானவர். அவர் மனைவி மற்றும் நாட்டை ஏமாற்றி இருக்க மாட்டார் என உறுதியாக நம்புகிறேன்” என்று கிரிக்கெட் அணி வீரர் தோனி கூறியிருந்தார்.
இந்நிலையில் முன்னாள் கேப்டன் கபில்தேவும் தற்போது ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார். இது குறித்து கூறியுள்ள கபில்தேவ், “ஷமியின் மனைவி கூறியிருக்கும் குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். ஷமி சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரிந்திருக்குமானால், முன்னமே இது குறித்து தெரிவிக்காதது ஏன்? அவர்களுக்கு இடையேயான உறவுகள் நன்றாக இருந்தபோது, அவர் அமைதியாக இருந்தது ஏன்?
இது விசாரணைக் குழுவிடம் உள்ளது. அவர்கள் வேலையை செய்யவிட வேண்டும். ஒருவேளை ஷமி இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டிருப்பாரேயேனால், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. வெட்கக்கேடான செயல்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ”ஷமி கடின உழைக்கும் சிறந்த கிரிக்கெட் வீரர். தற்போது அவரது தனிப்பட்ட உறவில் சிக்கல் எழுந்திருப்பதை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அவரது மனைவியின் குற்றச்சாட்டால் நாசப்படுத்தப்பட்டுள்ளது. நிரூபிக்கப்படும் வரையில் இது பீடித்திருக்கும்.
முஹமது ஷமிக்கும் அவரது மனைவி ஹசின் ஜஹானுக்கும் இடையேயான பிரச்சனைக்கு பின்னால் இருப்பது பற்றி எதுவும் தெரியாது. இதனைப் பற்றி ஊடகங்களில் வருவதன் மூலம் தான் நமக்கு தெரியும். என்ன நடந்தது என்று ஷமியும், ஹசின் ஜஹானும் சொன்னால் தான் தெரியவரும். வேறெதுவும் இதுபற்றி நமக்கு தெரியாது.
ஷமி ஒரு சிறந்த நபர். அதிகம் பேசமாட்டார். அவர் மீது நமக்கு எந்த சந்தேகமும் இல்லை. இந்த அசிங்கத்திலிருந்து எப்படி திரும்பி வரப்போகிறார் என்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.