புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஊடுவிய இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 வகை போர் ரகத்தின் 20 விமானங்கள் ஆறு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இந்த தாக்குதலில் மசூத் அசாரின் மச்சானும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை நடத்தி வந்தவருமான யூசுஃப் அசார் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே இந்த தாக்குதலுக்கு முன்னதாக பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷராப் அமீரகத்தில் நடந்த பத்திரிகையாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அதில், ``இந்தியா-பாகிஸ்தான் உறவு தற்போதுள்ள சூழ்நிலையில் மோசமான நிலையில் உள்ளது. இருப்பினும் இரு நாடுகள் இடையே அணு ஆயுத தாக்குதல்கள் நடைபெறாது என நினைக்கிறேன். இந்தியா மீது ஒரு அணு குண்டை வீசி தாக்குதல் நடத்தினால், இந்தியா திருப்பி 20 குண்டுகளை வீசி பாகிஸ்தானையே இல்லாமல் ஆக்கிவிடுவார்கள். அதற்கான வலிமை இந்தியாவிடம் இருக்கிறது.
இந்தியாவை வெற்றிபெற வேண்டுமானால் ஒரே வழிதான். முதலில் நாம் தான் தாக்க வேண்டும். அதுவும் எடுத்தவுடனேயே 50 அணுகுண்டுகளை வீசி தாக்கிவிட வேண்டும். அப்படி பாகிஸ்தானால் செய்ய முடியுமா?" எனக் கூறினார். முஷாரப் இப்படி கூறிய அடுத்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே பாகிஸ்தானுக்குள் புகுந்து இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.