புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஊடுவிய இந்திய விமானப் படையின் மிராஜ் 2000 வகை போர் ரகத்தின் 20 விமானங்கள் ஆறு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் மிகப்பெரிய முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. இந்த தாக்குதலில் மசூத் அசாரின் மச்சானும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை நடத்தி வந்தவருமான யூசுஃப் அசார் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆனால் இதையெல்லாம் பாகிஸ்தான் அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. அதிலும், ``இந்தியா எங்கள் நாட்டுக்குள் வந்து குண்டுகள் போட்டது என்னவோ உண்மை தான். ஆனால் அந்தக் குண்டுகள் எந்த உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை. ஏன் கட்டிடங்களை கூட சேதப்படுத்தவில்லை. எங்கள் விமானப்படையை பார்த்ததும் இந்திய விமானப்படை ஆளில்லாத காட்டுப் பகுதிகளுக்குள் குண்டுகளை வீசி சென்றுவிட்டது" எனக் கூறி மறுத்துள்ளது.
நிலைமை இப்படி இருக்க, இந்திய விமானப்படை தாக்குதல் குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசியுள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியவர், ``பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்படுவது எனக் கூறுவதெல்லாம் தேர்தலுக்காக நடத்தப்படக்கூடிய ஸ்டண்ட்டே ஒழிய வேறு எதுவும் கிடையாது. இது வெறும் நாடகம் தான். பாகிஸ்தான் தான் புல்வாமா தாக்குதலை உண்மையாகவே செய்தது என்றால் அந்த ஆதாரங்களை கொண்டு ஐநா சபையில் முறையிட்டு பாகிஸ்தான் மீது பொருளாதார தடையை கொண்டுவர வேண்டும்.
அதை செய்து பாகிஸ்தானை ஒதுக்காமல் ஆளில்லாத பகுதியில் போய் குண்டு போட்டு வருவது போன்ற சினிமா தனமான வேலைகளை இந்த பாஜக அரசு செய்து வருகிறது. காஷ்மீர் மக்கள் மீது மத்திய அரசு அக்கறை இருந்திருந்தால் அவர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக காஷ்மீர் மக்கள் ஒடுக்குமுறைகளை அவிழ்த்துவிட்டார்கள். இதை எல்லாம் இந்த பாஜக அரசு செய்யவில்லை. இது வெறும் கண்துடைப்பு நாடகம் மட்டுமே. இது பாஜகவும் பாகிஸ்தானும் சேர்ந்து நடத்துகிற நாடகம் எனவே நான் சந்தேகப்படுகிறேன்" என்றார்.