நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவரும் சூழலில், தமிழகத்தின் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க-வுக்கு 7 மக்களவைத் தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை எம்.பி பதவியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல், பா.ஜ.க-வுக்கு 5 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் இந்தக் கூட்டணியில் தே.மு.தி.கவை இணைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அப்படி தே.மு.தி.கவை சேர்த்துவிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் வெற்றிபெற்று விடலாம் என அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி கணக்கு போட்டு வருகிறது. இதற்கிடையே, அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி எத்தனை இடங்களில் வெல்லும் என்பதை பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தமிழகத்தில் 20 இடங்களை கைப்பற்றும் என உளவுத்துறை நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது" என்றார். இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன. காரணம் உளவுத்துறை என்பது அரசின் ஒரு அமைப்பு. இப்படி அரசின் அமைப்பை இப்படி எந்தக் கட்சி எத்தனை இடங்களை வெல்லும் என்பதை பார்க்கவா பயன்படுத்துவது. அதிகாரத்தில் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கக்கூடாது என தமிழிசைக்கு எதிராக கண்டன குரல்கள் எழுந்துள்ளன.