எதியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை இயக்க தடை விதித்துள்ளன. போயிங் நிறுவனத்துக்கு வக்காலத்து வாங்கி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உலக நாடுகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து வேறு வழியின்றி அமெரிக்காவிலும் போயிங் ரக விமானங்களை இயக்கத் தடை விதித்து அவசர உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எத்தியோப்பியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி 157 பேர் உயிரிழந்தனர். சில மாதங்களுக்கு முன் இந்தோனேசியாவிலும் இதே ரக விமானம் விபத்துக்குள்ளானதால் இந்த விமானங்களின் தயாரிப்பில் கோளாறு இருப்பதாக அச்சம் நிலவுகிறது.
இதனால் உலக நாடுகள் குறிப்பாக, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், கனடா, சிங்கப்பூர், ஓமன், ஆஸ்திரேலியா, இந்தோனேசியா என பல நாடுகளும் குறிப்பிட்ட போயிங் ரக விமானங்களுக்கு தடை விதித்து வரிசையாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன. இந்தியாவும் நேற்று மாலை முதல் இந்த விமானங்கள் பறக்கக் கூடாது என்று தடை விதித்து விட்டது.
போயிங் விமானங்களைத் தயாரிக்கும் அமெரிக்க நிறுவனத்திடம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கேட்டது இந்தியா. ஆனால் முறையான பதில் கிடைக்காததால் இந்தியா இந்த முடிவை எடுத்து விட்டது.
போயிங் நிறுவனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த அமெரிக்காவும் உலக நாடுகள் பலவும் தடை விதித்து வரும் நிலையில் தற்போது அந்நாட்டிலும் போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் அனைத்தையும் தரையிறக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
போயிங் நிறுவனம் மேக்ஸ் 8 விமானங்களின் பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து வருவதாகவும், அந்நிறுவனம் இறுதி முடிவை அறிவிக்கும் வரை போயிங் 8 ரக விமானங்கள் பறக்க தடை விதிக்கப் பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.