பிரேசிலில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர்.
பிரேசில் நாட்டில் உள்ள சாவோ பாலோ என்ற நகரிலிருந்து 70 கிலோ மீட்டர் கிழக்கில் உள்ளது சுஸானோ என்ற பகுதி. இந்தப் பகுதியில் உள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் இன்று காலை 9.30 மணியளவில் முகமூடி அணிந்து கையில் துப்பாக்கியுடன் இரண்டு மர்ம நபர்கள் புகுந்தனர். பள்ளிக்குள் புகுந்த அவர்களை காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். அவரை சுட்டுத்தள்ளிய இருவரும் நேராக மாணவர்கள் உணவருந்தும் அறைக்கு சென்று அங்கிருந்த ஊழியர்களை சுட்டனர். இதில் இரண்டு ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். தொடர்ந்து அங்கிருந்த மாணவர்களை கண்மூடித்தனமாகச் சுட்டுத் தள்ளினர். இதில் ஐந்து மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இறந்த மாணவர்கள் அனைவரும் 11 முதல் 18 வயதுடையவர்கள். இதன்பின் இருந்து வெளியே வந்த இருவரும் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் காயமடைந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தத் தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியதில், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இந்த பள்ளியில் படித்த மாணவர்கள் எதற்காக இப்படி கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தினர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் இந்தச் சம்பவம் நடப்பதற்கு சிறிது முன்னால் இந்தப் பள்ளிக்கு 500மீ தொலைவில் இன்னொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது, ஆனால் அதுக்கும் இதுக்கும் தொடர்புள்ளதா என்பதை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.