அமெரிக்காவில் வசித்து வந்த சீக்கிய குடும்பத்தினர் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகினர்.
அமெரிக்காவின் ஒகியோ மாநிலம் வெஸ்ட் செஸ்டர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சீக்கிய குடும்பத்தினர் வசித்து வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அந்த வீட்டிற்குள் புகுந்த ஒரு மர்ம நபர், வீட்டில் இருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளான். இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் இறந்தனர்.
உயிரிழந்த 4 பேரும் ஹக்கிகத் சிங் பனாக் (59), அவரது மனைவி பரம்ஜித் கவுர் (62), அவர்களின் மகள் ஷாலிந்தர் கவுர் (39), ஹக்கிகத் சிங் பனாக்கின் மைத்துனி அமர்ஜித் கவுர் (58) ஆகியோர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களின் குழந்தைகள் தாக்குதல் நடந்தபோது வீட்டில் இல்லாததால் உயிர்தப்பினர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக போலீசாருடன் தொடர்பு கொண்டு, குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது தெளிவாக தெரியவில்லை. இனவெறி தாக்குதலுக்கான அடையாளமும் இல்லை. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த தாக்குதல் குறித்து இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது இனவெறி தாக்குதலாக இருக்காது என நம்புவதாகவும், கொல்லப்பட்டவர்களில் ஒருவர் இந்தியாவில் வசிப்பவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் யாரும் பிடிபடவில்லை.