அமெரிக்காவில் தயாராகும் ஹார்லி டேவிட்சன் மோட்டார் சைக்கிளுக்கு இந்தியாவில் 50 சதவிகிதம் இறக்குமதி வரி விதிக்கப்படுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை, டிரம்ப் நேரடியாக தாக்கி பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களுக்கு இந்திய அரசு இறக்குமதி சுங்கவரி விதித்து வருகிறது.
இவ்வகையில், 800 சி.சி. இழுவைத்திறன் கொண்ட வாகனங்களுக்கு அவ்வாகனத்தின் விலையில் 60 சதவிதமும் 800 சி.சி.க்கும் அதிகமான இழுவைத்திறன் கொண்ட வாகனங்களுக்கு வாகனத்தின் விலையில் 75 சதவிகிதமும் இறக்குமதி வரியாக வசூலிக்கப்பட்டு வந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிறகு மத்திய அரசின் கலால் மற்றும் சுங்கவரித் துறையானது, திடீர் அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்குமான வரி, சராசரியாக 50 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அதில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவின் நாடாளுமன்ற குழுவினரிடையே பேசியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், “அண்மையில், இந்தியாவில் இருந்து தன்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ‘ஒரு ஜென்டில் மேன்’, எங்கள் நாட்டில் இருசக்கர வாகனங்களுக்கான இறக்குமதி வரியை தற்போது 75-இல் இருந்து 50 சதவிகிதமாகவும், 100 சதவிகிதமாகக்கூட குறைத்து விட்டதாக தெரிவித்தார்” என்றும் டிரம்ப் ஆவேசப் பட்டுள்ளார்.
மேலும், கூறியுள்ள அவர், “லட்சக்கணக்கான இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன; அவற்றுக்கு நாம் விதிக்கும் இறக்குமதி வரி என்ன தெரியுமா? ஒன்றுமே இல்லை. இதற்கு பெயர்தான் தாராளமய வர்த்தகமா?
இந்த விஷயத்தில் இந்தியா மீதுநான் பழி போடவில்லை; ஆனால், அவர்களுக்கு (இந்தியாவுக்கு) இணையாக நாமும் இறக்குமதி விதித்தாக வேண்டும் என்று நான் கூறுகிறேன்; அவ்வாறு செய்யலாமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.