பஹ்ரைனில் பழமையான கிருஷ்ணன் கோயில் புதுப்பிப்பு பணியை துவக்கி வைக்கும் மோடி

by எஸ். எம். கணபதி, Aug 23, 2019, 11:42 AM IST

பிரதமர் மோடி நாளை பஹ்ரைன் செல்கிறார். அங்கு 200 ஆண்டு பழமையான கிருஷ்ணன் கோயிலை புதுப்பிக்கும் பணியை அவர் துவக்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தற்போது மூன்று நாடுகள் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். பிரான்ஸ் நாட்டுக்கு நேற்று(ஆக.22) சென்ற அவர் அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இன்று அந்நாட்டு பிரதமர் எடோடு சார்லஸ் பிலிப்பை சந்தித்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து, பாரீசில் உள்ள யுனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் அந்நாட்டில் வசிக்கும் இந்தியப் பிரமுகர்களிடையே மோடி உரையாற்றுகிறார்.

பிரான்சில் இருந்து பிரதமர் மோடி இன்றே, ஐக்கிய அரபு நாடுகளுக்கு செல்கிறார். அங்கு அவருக்கு அந்நாட்டு உயரிய விருது வழங்கப்படுகிறது. பின்னர், அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் சயீத்தை சந்தித்து பேசுகிறார். இதைத் தொடர்ந்து, மோடி அங்கிருந்து பஹ்ரைனுக்கு நாளை செல்கிறார்.

பஹ்ரைன் தலைநகர் மானாமாவில் 200 ஆண்டு பழமையான கிருஷ்ணன் கோயில் உள்ளது. அக்கோயிலை அங்குள்ள ‘தட்டை இந்து சமுதாய அமைப்பு’ நிர்வகித்து வருகிறது. இக்கோயிலின் 200 ஆண்டு விழாவை முன்னிட்டு கோயில் புதுப்பிக்கப்பட உள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் தலைவர் பாப் தாக்கர் கூறுகையில், ‘‘இந்த கோயிலின் 200வது ஆண்டு விழா நடைபெற உள்ள தருணத்தில் இந்திய பிரதமர் மோடி வருகை புரிவது சிறப்பு. இந்த கோயிலை 42 லட்சம் அமெரிக்க டாலர் செலவில் புதுப்பிக்க உள்ளோம். இந்த பணியை ஆக.24ம் தேதி, பிரதமர் மோடி துவக்கி வைக்க உள்ளார். இந்த கோயில் 45 ஆயிரம் சதுர அடியில் 3 தளங்களை கொண்ட கோயிலாக கட்டப்படுகிறது’’ என்று தெரிவித்தார்.

பஹ்ரைனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நாட்டுக்கு வருகை புரியும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரத்துக்கு திங்கட்கிழமை வரை சிபிஐ காவல்; சிறப்பு நீதிமன்றத்தில் பரபரப்பாக நடந்த வாதம்


Leave a reply