காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது.
காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 5ம் தேதி ரத்து செய்தது. மேலும், அம்மாநிலம், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளால், காஷ்மீரில் எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படலாம் என்று கருதி, முன்கூட்டியே ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் அங்கு பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர். ஸ்ரீநகர் உள்பட 22 மாவட்டங்களிலும் கடந்த ஒரு வாரமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்பட பல கட்சித் தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி முதல் இணையதள, மொபைல் மற்றும் தொலைபேசி சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன.
இதன்பின்னர், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீநகர் உள்பட 5 மாவட்டங்களில் மொபைல் மற்றும் இணைய சேவைகள் தொடங்கின. மேலும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஸ்ரீநகரில் கடந்த திங்களன்று, அரசு அலுவலகங்கள், பள்ளிகள் திறக்கப்பட்டன. எனினும் அங்கு இன்னும் முழு அமைதி ஏற்படவில்லை. ஊரடங்கு தளர்த்தப்படும் இடங்களில் சிலர் மீண்டும் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்,
இந்நிலையில், ஸ்ரீநகரில் சில இடங்களில் நேற்று போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.
ஸ்ரீநகரில் உள்ள ஐ.நா. ராணுவ கண்காணிப்பு குழு அலுவலகத்தை நோக்கி பேரணி நடத்துவதற்கு அந்த போஸ்டர்களி்ல் அழைப்பு விடப்பட்டிருந்தது. 370வது பிரிவை நீக்கி, முஸ்லீம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியை மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தவும் போஸ்டர்களில் அழைப்பு விடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்ரீநகரி்ல் மொபைல், தொலைபேசி மற்றும் இணையசேவைகள் முடக்கப்பட்டன. மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. சில இடங்களில் ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால், தலைநகர் ஸ்ரீநகரிலேயே கடைகள் திறக்கப்படவில்லை. 18வது நாளாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காஷ்மீரில் கட்டுப்பாடுகள் நீடிப்பு; அலுவலகங்கள், பள்ளிகள் திறப்பு