தொழில் செய்யும் பல நிறுவனங்கள் வரும் லாபத்திற்கு ஈடாக வரி செலுத்துவதில்லை. வரி செலுத்துவதில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்ற கணக்கையே பல தொழில் நிறுவனங்கள் செய்து அரசை ஏமாற்றி வருகின்றன.
இப்படி ஏமாற்றும் நிறுவனங்களில் கூகுள் கூட விதிவிலக்கல்ல. அதுவும் கோடிகளில் அல்ல, பல ஆயிரம் கோடிகளில் கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளது அப்பட்டமாக கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டு தற்போது அபராதத் தொகையுடன் சேர்த்து மொத்தம் 7600 கோடி ரூபாய் கூகுள் நிறுவனம் கட்ட வேண்டும் என்ற தீர்ப்பு வந்துள்ளது.
உலகின் பல நாடுகளில் கூகுள் தனது கிளைகளை நிறுவி தொழில் செய்து வருகிறது. பாரீஸ் நகரில் உள்ள கூகுள் நிறுவனம் தான் தற்போது இந்த சிக்கலில் சிக்கியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அதன்மீது வழக்குகள் தொடரப்பட்டன. சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பு தொகையான 465 மில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் 3,659 கோடி ரூபாயும், வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான அபராதத் தொகை 500 மில்லியன் டாலர் அதாவது 3,933 கோடி ரூபாயும் கூகுள் நிறுவனம் கட்ட வேண்டும் என பாரீஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் சிக்கிய கூகுள் நிறுவனம், இதுபோன்று உலகின் மற்ற நாடுகளிலும், வரி ஏய்ப்பு செய்துள்ளதா என்பதை ஆய்வு செய்து அதற்கான சரியான தண்டனையை வழங்க வேண்டும் என்றும் அந்த நீதிமன்ற நீதிபதி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.