ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்படும் காட்சிகளை ஒரு சினிமா பார்ப்பது போல் பார்த்ததாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை கைப்பற்றி, இஸ்லாமிய தேசம் அமைக்கும் நோக்கத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ்(இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அன்ட் சிரியா) தீவிரவாதிகள் அந்நாடுகளில் ஊடுருவினர். மேலும், பல நாடுகளில் பயங்கர குண்டுவெடிப்புகளை நடத்தி, உலகிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கினர்.
சர்வதேச அளவில் மிகவும் பயங்கரமான அமைப்பாக ஐ.எஸ். அமைப்பு கருதப்பட்டது. இந்த அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி, தேடப்படும் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். பாக்தாதி கொல்லப்பட்டதாக சில சமயங்களில் செய்திகள் வெளியானாலும் அது தவறான தகவல் என்று தெரிய வந்தது.
இந்நிலையில், கடந்த 26ம் தேதியன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு மிகப் பெரிய சம்பவம் நடைபெற்றுள்ளது என்று பதிவிட்டிருந்தார். அப்போதே அமெரிக்கா முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின், டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அவர் அமெரிக்க தொலைக்காட்சியில் மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் சில தகவல்களை வெளிப்படையாக தெரிவித்தார். அதன்படி, கடந்த 26ம் தேதியன்று மாலை 4.30 மணிக்கு வெள்ளை மாளிகை அலுவலகத்திற்கு டிரம்ப் வந்துள்ளார். பாதுகாப்பு துறை துணை தலைவர் மைக்பென்ஸ், ராணுவ இணை அமைச்சர் மார்க் எஸ்பர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் ஆகியோர் அங்கு கூடி, ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதியை அமெரிக்கப்படைகள் சுற்றி வளைக்கும் காட்சிகளை ஒரு சினிமாவைப் போல் பார்த்துள்ளனர்.
பாக்தாதியின் இருப்பிடங்கள் குறித்து குர்து இனத்தவர் ஒரு மாதத்திற்கு முன்பே பல தகவல்களை அமெரிக்காவுக்கு அளித்திருக்கிறார்கள். அதனடிப்படையில் அமெரிக்க உளவு துறை 2 வாரங்களுக்கு முன்பே பாக்தாதியை சுற்றிவளைக்க ஸ்கெட்ச் போட்டது. அந்த திட்டம் குறித்து 3 நாட்கள் முன்பாக அதிபர் டிரம்ப்புக்கு தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, பாக்தாதியை சுற்றி வளைக்கும் ரெய்டுகளுக்கு, ரஷ்யா, ஈராக், துருக்கி வான்பகுதிகளை பயன்படுத்த அந்த நாடுகளிடம் அனுமதி கேட்கப்பட்டது. ரஷ்யாவிடம் அனுமதி பெற்றபோதிலும் திட்டம் குறித்த விரிவான தகவல்கள் பரிமாறப்படவில்லை.
அமெரிக்க நேரப்படி மாலை 4.30 மணிக்கு அமெரிக்கப் படையின் ஆபரேஷன் தொடங்கியது. அப்போது சிரியாவில் பாக்தாதி தங்கியிருந்த இட்லிப் பகுதியில் இரவு 10.30 மணியாகும். அமெரிக்கப் படைகள், ஈராக்கின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு விமானத் தளத்தைப் பயன்படுத்தின. 8 ஹெலிகாப்டர்களில் மோப்பநாய்களுடன், கொரில்லா தாக்குதலில் அனுபவம் வாய்ந்த படைவீரர்கள் அனுப்பப்பட்டனர். அவர்கள் பாக்தாதியின் பெரிய பங்களா அருகே இறங்கிய போது, ஏற்கனவே அப்பகுதியில் அமெரிக்கப் படையினர், போர் விமானங்கள், கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
பாக்தாதியின் பெரிய பங்களாவின் காம்பவுண்ட் சுவர்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்டன. படைவீரர்கள் அதிரடியாக உள்ளே நுழைந்து 11 குழந்தைகளை மீட்டனர். அவர்கள் உடனடியாக அங்குள்ள ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அதே சமயம், தனது 3 குழந்தைகளுடன் பாக்தாதி, ஒரு பாதாள அறைக்குள் சென்று விட்டார். ஆனாலும் அந்த இடத்தை அமெரிக்கப் படைகள் முன்பே கண்டுபிடித்திருந்ததால், மோப்ப நாய்கள் மூலம் பாக்தாதியை விரட்டிச் சென்றனர்.
ஒரு இடத்தில் அந்த அறையை விட்டு வேறெங்கும் போக முடியாத போது, பாக்தாதி சத்தமாக அலறியதாவும், பயங்கரமாக கத்தி விட்டு, தனது உடலில் இருந்த வெடிகுண்டு சட்டையை வெடிக்க வைத்ததாகவும் டிரம்ப் கூறினார். அதில் பாக்தாதி உடல் சிதறியதாகவும், அந்த 3 குழந்தைகளும் இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.
இதன்பின், அந்த பங்களாவில் ஐ.எஸ். அமைப்பினர் பற்றிய பல்வேறு ஆவணங்கள், தகவல்களை அமெரிக்கப் படைகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் மூலம், ஐ.எஸ். தீவிரவாதிகளின் அடுத்த கட்ட நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டு அந்த இயக்கம் முற்றிலுமாக அழிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனி உலகம் பயங்கரவாதத்திற்கு அச்சப்படாமல் நிம்மதியாக வாழலாம் என்றும் டிரம்ப் கூறியிருக்கிறார்.