பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு சிறை.. லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு

by எஸ். எம். கணபதி, Feb 13, 2020, 15:41 PM IST

பாகிஸ்தானில் ஜமாத் உத் தாவா என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதிற்கு ஐந்தரை ஆண்டு சிறை தண்டனை விதித்து லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தீவிரவாதி ஹபீஸ் சயீத். மும்பை குண்டுவெடிப்பில் 166 பேர் வரை கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டது ஹபீஸ் சயீத் என்று தெரிய வரவே அவரை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் அதற்கு சரியான ஆதாரம் இல்லை என்று மழுப்பி வந்தது. போதிய ஆதாரம் அளித்தும் பாகிஸ்தான் திருந்தவில்லை. தீவிரவாதி ஹபீஸ் சயீத் அங்கு சுதந்திரமாக உலாவினார். மேலும், தீவிரவாதத்தை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசியும் வந்தார்.

இந்நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக உலக நாடுகள் திரும்பியுள்ளன. பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளிக்கும் நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாக கருதப்பட்டு, அதற்கான உதவிகளை தடை செய்ய சர்வதேச அமைப்பு நடவடிக்கை எடுத்தது.

இந்த சூழலில், தற்போது ஹபீஸ் சயீத்துக்கு பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்த 2 வழக்குகளில் தலா ஐந்தரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து லாகூர் தீவிரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஹபீஸ் சயீத்தின் கூட்டாளி ஜாபர் இக்பாலுக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் தீவிரவாதி ஹபீஸ் சயீத்திற்கு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். சர்வதேச நாடுகளின் நெருக்கடிகளால் பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு பாகிஸ்தான் உள்ளாகி இருக்கிறது.

You'r reading பாகிஸ்தானில் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்திற்கு சிறை.. லாகூர் நீதிமன்றம் தீர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More World News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை