இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். இதையடுத்து, பொதுத் தேர்தல் ஏப்ரல் 25ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்றார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் இறுதிக்கட்ட போர் நடந்த போது, மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தார். அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சே அந்நாட்டு ராணுவ செயலராக இருந்தார். அந்த போரில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்களைக் குறி வைப்பதற்காகப் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களைக் கொன்று குவித்தனர். இது தொடர்பாகச் சர்வதேச விசாரணைக்குக் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சே அதிபராகி விட்டதால், இடைக்கால பிரதமராக மகிந்த ராஜபக்சேவை நியமித்தார். இதைத் தொடர்ந்து, நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைத்து அதிபர் கோத்தபய உத்தரவிட்டார். நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என்றாலும், தற்போது நான்கரை ஆண்டுகளே முடிந்திருந்தது. எனினும், அதிபர் தனக்குரிய அதிகாரத்தைக் கொண்டு நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு பொதுத் தேர்தல் வரும் ஏப்.25ம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டுத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் மகிந்த ராஜபக்சே மீண்டும் வெற்றி பெற்று பிரதமராக வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.