நாட்டு நலனுக்காக நாம் உழைத்து வருகிறோம், சிலர் அவர்களின் கட்சி நலனுக்காக உழைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம், இன்று காலை நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். பிரதமர் மோடி பேசும் போது. எதிர்க்கட்சிகளை நேரடியாகக் குறிப்பிடாமல் தாக்கினார்.
அவர் கூறுகையில், நாட்டு நலன் என்பதே கட்சியின் நலனை விட மிக முக்கியமானது. நாம் நாட்டு நலனுக்காகப் பாடுபட்டு வருகிறோம். சில நாட்டு நலனை விட்டு விட்டு, கட்சியின் நலனுக்காக வேலை செய்கிறார்கள். வளர்ச்சி என்பதே நமது மந்திரம். அமைதி, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கம்தான் வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய விஷயங்களாகும் என்று குறிப்பிட்டார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஸ்மிரிதி இரானி ஆகியோர் உள்பட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
டெல்லியில் நடந்த சிஏஏ போராட்டம், அதையொட்டி கலவரங்களில் 46 பேர் உயிரிழப்பு ஆகியவற்றுக்கு ஆளும் பாஜகவே காரணம் என்றும், அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன. இந்நிலையில், அனைத்துக்கும் எதிர்க்கட்சிகளே காரணம் என்ற ரீதியில் மோடி பேசியுள்ளார்.