உலகம் முழுவதும் கொரோனா பலி 21,297 ஆக அதிகரிப்பு...

by எஸ். எம். கணபதி, Mar 26, 2020, 11:59 AM IST

கொரோனா வைரஸ் நோயால் நேற்று ஸ்பெயினில்தான் அதிகபட்சமாக 738 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பலி எண்ணிக்கை 21,297 ஆக அதிகரித்திருக்கிறது.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. சீனா, இத்தாலி போன்ற நாடுகளில் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 24) வரை 4 லட்சத்து 22,759 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருந்தது. இது இன்று 4 லட்சத்து 71,942 ஆக உயர்ந்திருக்கிறது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் ஒரு லட்சத்து 14,696 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இன்று காலை நிலவரப்படி, கொனோவுக்கு 21,297 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். தற்போதைய நிலையில் சுமார் 3 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். அவர்களில் 14,792 பேருக்கு உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.
இத்தாலியில்தான் அதிகபட்சமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கிறது. கடந்த 4 நாட்களாக தினமும் 500க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகின்றனர். நேற்று மட்டும் 683 பேர் இறந்துள்ளனர். இந்நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை 7.503 ஆக உயர்ந்திருக்கிறது.
அடுத்து, ஸ்பெயினில் நேற்று மட்டும் 738 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இத்துடன் பலி எண்ணிக்கை 3,434 ஆக உயர்ந்திருக்கிறது. இந்நாட்டில் 39,673 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

சீனாவில் பலி எண்ணிக்கை 3265 ஆக உயர்ந்தது. அதே சமயம், பாதித்தவர்களின் எண்ணிக்கை 81 ஆயிரமாக உள்ளது. புதிதாக சிலருக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது.
இதே போல், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 656 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. 13 பேர் இந்நோய்க்கு பலியாகியுள்ளனர். 43 பேர் குணமடைந்திருக்கிறார்கள்.


Leave a reply