டாக்டருக்கு கொரோனா.. டெல்லியில் 800 பேர் தனிமையில் கண்காணிப்பு..

by எஸ். எம். கணபதி, Mar 26, 2020, 12:06 PM IST

டெல்லியில் டாக்டர் ஒருவரின் குடும்பத்திற்கு கொரோனா தொற்று பாதித்ததைத் தொடர்ந்து 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர்.

இந்தியாவில் இது வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 656 ஆக உள்ளது. 13 பேர் உயிரிழந்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்களில் அதிகமானோர் டெல்லியில்தான் வந்திறங்கினர். அவர்கள் அனைவரும் ராணுவ மருத்துவ முகாம்களில் 14 நாள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லி ஆம்ஆத்மி அரசின் சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறுகையில், டெல்லியில் இது வரை 36 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அரசு மருத்துவமனை டாக்டர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சவுதி அரேபியாவில் இருந்து வந்த ஒரு பெண்ணுக்கு சிகிச்சை அளித்ததன் மூலம் அவருக்கு தொற்று ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, டாக்டரின் மனைவி, மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், டாக்டர் பணியாற்றிய மருத்துவமனையில் இருந்தவர்கள், டாக்டரின் குடும்பத்தினரிடம் தொடர்பில் இருந்தவர்கள் என 800 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர் என்று தெரிவித்தார்.


Leave a reply