கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவியதற்குச் சீனாவே பொறுப்பு என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் 244வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் பேசியதாவது:கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்பு அமெரிக்கா எல்லா துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பல நாடுகளில் நாம் புரிந்து வந்த வர்த்தகங்களால் நமது கஜானாவுக்கு ஏராளமான வருவாய் வந்து கொண்டிருந்தது. ஆனால், அந்த நாடுகளால் தான் தொல்லை வருகிறது.
மருத்துவ அங்கிகள், முகக்கவசங்கள், சிகிச்சைக் கருவிகள் போன்றவற்றை நாம் தயாரிக்கிறோம். ஆனால், அவற்றைச் சீனாவில் உள்ள நமது கம்பெனிகளில் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்த சீனாவால் நமக்கு கொரோனா வைரஸ் வந்திருக்கிறது. கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களைச் சீனா மறைத்ததும், அது குறித்து மற்ற நாடுகளுக்கு எச்சரிக்காமல் விட்டதும்தான் இந்நோய் உலகம் முழுவதும் பரவியதற்குக் காரணம். கொரோனா பரவலுக்குச் சீனாவே பொறுப்பு.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதிலும், சிறந்த சிகிச்சை அளிப்பதிலும் நமது விஞ்ஞானிகள் சிறப்பாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு இறுதிக்குள் கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டு விடும். உலகிலேயே நாம்தான் சிறப்பான பரிசோதனைகளைச் செய்கிறோம். அதனால்தான், அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகமாகத் தெரிகிறது.
இவ்வாறு டிரம்ப் பேசினார்.