தமிழகத்தில் இது வரை ஒரு லட்சத்து 7001 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நோய்க்கு 1450 பேர் பலியாகியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 4000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(ஜூலை4) மட்டும் புதிதாக 4280 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 100 பேரும் அடக்கம்.
தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 7001 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 2214 பேரையும் சேர்த்து மொத்தம் 60,592 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 65 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 1450 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 35,426 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 12 லட்சத்து 49317 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
சென்னையில் தினமும் சுமார் 2000 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று 1848 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 66538 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று மட்டும் செங்கல்பட்டில் 215 பேர், திருவள்ளூரில் 251 பேர், காஞ்சிபுரத்தில் 134 பேர், மதுரையில் 350 பேர், ராமநாதபுரத்தில் 111 பேர், திருவண்ணாமலையில் 171 பேர், ராமநாதபுரத்தில் 64 பேர், விழுப்புரத்தில் 53 பேர், விருதுநகரில் 100 பேர், கன்னியாகுமரியில் 69 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களிலும் 20, 25 பேர் வரை கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.