மிஷ்கின் நடித்துத் தயாரித்த சவரக்கத்தி படம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் பூர்ணா, இவர் கொச்சி மரட் பகுதியில் வசிக்கிறார். சில தினங்களுக்கு முன் நடிகை பூர்ணாவை திருமணத்துக்குப் பெண் கேட்டு அவரது வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றது.அதில் ஒருவர் தான் ஒரு சினிமா தயாரிப்பாளர். பெயர் ஜோணி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். ஆனால் அந்த நபர் கோட்டயம் பகுதியில் சவுண்ட்ஸ் மற்றும் பந்தல் நிறுவனம் நடத்தும் ராஜூ என்பது தெரிய வந்துள்ளது.
பூர்ணாவின் தந்தையிடம் இது தான் மாப்பிள்ளை துபாயில் நகைக் கடை நடத்துவதுடன் பல்வேறு நாடுகளில் நகைக்கடை வைத்துள்ளதாகக் அந்த கும்பல் ஆசை வார்த்தைகளை கூறியது. சில நாள் கழித்து, நகை கடைக்கு 10 லட்சம் பணம் தேவை உடனே தரவேண்டும் என்று பூர்ணாவிடம் அந்த கும்பலை சேர்ந்தவர் ஒருவர் பணம் கேட்டார். அடுத்தடுத்து அந்த கும்பல் மிரட்டத் தொடங்கியது. இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர்.
பின்னர் இது குறித்து பூர்ணா சார்பில் அவரது தந்தை மரட் போலீசில் புகார் அளித்தார். இதையறிந்து அந்த கும்பலால் மிரட்டப்பட்ட பல பெண்கள் புகார் அளிக்கத் தொடங்கினர்.. இது பெரிய கும்பலின் கைவரிசை என்று முடிவுக்கு வந்த போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். அதில் அடுத்தடுத்து 10 பேர் கைது செய்யப்பட்டனர். மாப்பிள்ளையின் தாய் எனக் கூறி பூர்ணா வீட்டுக்குச் சென்ற பெண் இந்த வழக்கில் கைதான ஒருவரின் மனைவி என அதிர்ச்சி தகவலும் வெளியாகி இருக்கிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடக்கிறது. அதில் பல்வேறு தகவல்களை வாக்கு மூலமாக பெற்றிருக்கின்றனர்.
பூர்ணாவிடம் மாப்பிள்ளை என்று ஒரு போட்டோ அளிக்கப்பட்டது. அந்த நபர் கேரளாவில் டிக்டாக்கில் வீடியோக்களை வெளியிட்டுப் பிரபலமானவர். அவர் பெயர் யாசர். காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. ஆனால் பூர்ணா வீட்டில் அந்த நபரின் பெயரை மாற்றி சொல்லி இருக்கின்றனர். இதையடுத்து யாசரை போலீசார் அழைத்து விசாரணை நடத்திய போது தான் அந்த போட்டோவை அளிக்கவில்லை என்றும் மோசடி கும்பல் பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது எனவும் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். இந்த வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள் நடந்து வருகின்றன.