போர்ச்சுகல் அதிபர் மார்செலோ ரெபெல்லோ டிசெளசா. 71 வயதான இவர் தற்போது அந்நாட்டுச் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயங்கி வந்தனர். இதனால் சுற்றுலாத்துறையை நம்பியிருக்கும் பல்வேறு மக்கள் வாழ்வாதாரங்களை இழந்தனர். இவர்களைக் காப்பாற்றும் பொருட்டாகவும், மக்களை வீடுகளை விட்டு வெளியே வர வைக்கும் பொருட்டாகவும் அதிபர் மார்செலோ அல்கார்வே கடற்கரை நகருக்கு விடுமுறையைக் கழிப்பதற்காகச் சென்றிருந்தார்.
அங்குள்ள பிரையா டூ அல்வார் கடற்கரையில் சுற்றுலாத்துறை தொடர்பான விளம்பர காட்சிக்காக, அதிபர் மார்செலோ கடற்கரையில் நீந்திக் கொண்டிருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப் பட்டு வந்தது. அப்போது, நடுக்கடலில் இரண்டு பெண்கள் தங்கள் படகில் இருந்து தவறி விழுந்தது தத்தளித்துக் கொண்டிருந்தனர். அவர்களின் கூச்சலைக் கேட்ட அதிபர் மார்செலோ, சிறிதும் தாமதிக்காமல் அவர்களைக் காப்பாற்றக் கடலுக்குள் விரைவு படகில் சென்றார். கடலுக்குள் நீந்தி அவர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்தார்.
இதைப் பார்த்த மக்கள், இந்தக் காட்சிகளைப் படமாக்கி வலைத்தளங்களில் பதிவிட அந்த வீடியோ வைரலானது. காவலர்கள் சுற்றி இருக்க, தன் மக்களைக் காப்பாற்ற தன் வயதையும் பொருட்படுத்தாமல், கடலுக்குள் குதித்துள்ளார் அதிபர் மார்செலோ. இதனால் அவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.