கோவை ஆர்.எஸ்.புரம், பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் வசித்துவருபவர்கள் ரவிச்சந்திரன் - சுமதி தம்பதி. இந்தத் தம்பதியருக்கு 19 வயதில் சுபஸ்ரீ என்ற மகள் உள்ளார். இதற்கிடையே, சுபஸ்ரீ நேற்று மாலை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து சுபஸ்ரீ மரணம் குறித்து வழக்குப் பதிந்த போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். முதற்கட்ட விசாரணையில் நீட் தேர்வு பயத்தால் மாணவி சுபஸ்ரீ தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது. மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்த சுபஸ்ரீ, அதற்காகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நீட் தேர்வு பயிற்சி எடுத்து வந்துள்ளார். தனியார் அகாடமி ஒன்றில் சேர்ந்து பயிற்சி எடுத்து வந்திருக்கிறார்.
இந்த வருடத்துக்கான நீட் தேர்வு, லாக் டவுன் காரணமாக ஏற்கனவே தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சமீபத்தில், ` இந்த வருடத்துக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13-ம் தேதி நடக்கும் மெடிக்கல் கவுன்சில் திடீரென அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்த, கொரோனா காலத்தில் நீட் உள்ளிட்ட தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், `நீட் தேர்வைத் தள்ளிவைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் கைவிரித்தது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அறிந்த மாணவி சுபஸ்ரீ தேர்வு குறித்த பயத்தில் இருந்து வந்துள்ளார். இந்தப் பயமே மன உளைச்சலாக மாற, தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் மாணவி சுபஸ்ரீ. ஏற்கனவே நீட் தேர்வு தமிழகத்தில் பல்வேறு உயிர்களைக் காவு வாங்கியிருக்கும் நிலையில் தற்போது மாணவி சுபஸ்ரீயின் இறப்பும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக தலைவர்கள் பலர் மாணவி சுபஸ்ரீயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.