அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு தற்போதைய அதிபர் ட்ரம்பும், துணை அதிபர் பதவிக்கும் தற்போதைய அதிபர் மைக் பென்ஸ் போட்டியிடுகின்றனர். ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் பதவிக்கு ஜோ பிடனும், துணை அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸூம் போட்டியிடுகின்றனர். தேர்தல் பிரச்சாரத்தில் தமிழக வம்வசவாளியான கமலா ஹாரிஸ் கவனம் ஈர்த்து வருகிறார். நிறவெறி தாக்குதல் என டிரம்ப் அரசின் மோசமான செயல்பாடுகளை முன்னிறுத்தி பேசி வருகிறார். இதனால் இவர் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறார் கமலா ஹாரிஸ்.
கமலா ஹாரிஸின் போட்டியை சமாளிக்க, தங்கள் கட்சியில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவரை களமிறக்கி இருக்கிறார் டிரம்ப். அவர் நிக்கி ஹேலி. இவர்களின் பெற்றோர்கள் பஞ்சாப் மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இவரின் பெற்றோர்களுக்கு தெற்கு கரோலினாவில் உள்ள பேம்பெர்கில் பிறந்தவர் இந்த நிக்கி. இவரின் இயற்பெயர் நிம்ரதா ரந்தாவா. சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், பின்னாளில் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி தனது பெயரையும் மாற்றிக்கொண்டார். இவரின் கணவர் பெயர் மிஷெல் ஹேலி. அமெரிக்க தேசிய பாதுகாப்புப் படையில் கேப்டனாக பணியாற்றி வருகிறார்.
2010ஆம் ஆண்டு தெற்கு கரோலினாவின் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், முதல் பெண் ஆளுநர், சிறுபான்மையினத்தில் இருந்து வந்த முதல் ஆளுநர், அமெரிக்காவின் இளம் வயது ஆளுநர் என்று பல்வேறு சிறப்புகளை பெற்றுள்ளார். இவரது ஆளுநர் பதவிக் காலத்தை சிறப்பாக பயன்படுத்தவும் செய்தார். இதனால் 2014ல் மீண்டும் ஆளுநராக தேர்ந்தெடுக்கப்பட்டார் நிக்கி.
இதன்பின் ஐ.நாவுக்கான முன்னாள் அமெரிக்கத் தூதர் பதவி நிக்கிக்கு தேடிவந்தது. இதில் இரண்டு ஆண்டுகள் பதவி வகித்தவர் பின்னர் அதனை ராஜினாமா செய்தார். இதற்கிடையே, குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் டிரம்ப்பை ஆதரித்து பேசியிருக்கிறார் நிக்கி. அவரின் பேச்சு தற்போது வைரலாகி வருகிறது. ``இந்தியாவிலிருந்து வந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் மகள் என்பதை நான் பெருமையுடன் கூறுவேன். என் தந்தை தலைப்பாகை அணிவார். என் தாய் புடவை உடுத்துவார். நான் கறுப்பு மற்றும் வெள்ளை உலகில் ஒரு பழுப்பு நிறப் பெண். என் குடும்பம் நிறைய பாகுபாடுகளையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டது. ஆனால் ஒருபோதும் என் தந்தையும், தாயும் எனக்குக் குறைகளையும் வெறுப்பையும் கற்பிக்கவில்லை.
அமெரிக்கா ஒரு இனவெறி நாடு இல்லை. ஆனால் அமெரிக்கா இனவெறி நிறவெறி உள்ள நாடு என்று கூறுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. ஆனால் அது முற்றிலும் பொய். அமெரிக்கா நிச்சயமாக இனவெறி கொண்ட நாடு கிடையாது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனின் பிரசாரத் திட்டங்கள் அராஜகங்கள், கலவரங்கள் மற்றும் கலாசார எதிர்ப்பு கொண்டவை. அமெரிக்காவுக்கான முன்னேற்றத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய நேரம் இது. நமக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அமெரிக்காவை மேலும் சுதந்திரமாகவும் அழகாகவும் மாற்ற வேண்டும். ஒவ்வொரு அமெரிக்க ஆப்ரிக்கரின் வாழ்க்கையும் மதிப்பு மிக்கது என்பதை நாங்கள் அறிவோம்" எனக் கூறியுள்ளார்.