22 மீட்டர் விட்டம் கொண்ட விண்கல் ஒன்று நாளை (செப்டம்பர் 1) பூமிக்கு அருகில் வர இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. மிகவும் ஆபத்தானது என்று கருதப்படக்கூடிய 2011 இஎஸ்4 என்ற விண்கல் செப்டம்பர் 1ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் வர இருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது. இந்த விண்கல் 22 முதல் 49 மீட்டர் விட்டம் உடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிக்கு மிக அருகில் இருப்பது அதன் துணைக்கோளான சந்திரன். சந்திரன் பூமியிலிருந்து 3.84 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதை விடக் குறைந்த தூரத்தில் விண்கல் இஎஸ்4 பூமிக்கு அருகில் வர இருக்கிறது. வினாடிக்கு 8.16 கிலோ மீட்டர் வேகத்தில் இது நகரும்.பூமிக்கு மிக அருகில் வரக்கூடிய இந்த விண்கல் முதன்முதலில் 2011 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமிக்கு அருகில் வரும்.
கடந்த முறை 2011ஆம் வந்தபோது நான்கு நாள்கள் அதைக் காண முடிந்தது. சந்திரனை விடக் குறைவாகப் பூமியிலிருந்து ஏறத்தாழ 1.2 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் இது கடக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பூமிக்கு மிக அருகில் இருப்பதால் இந்த விண்கல் ஆபத்தான கருதப்பட்டாலும் பூமியிலிருந்து குறைந்தது 45,000 மைல் தொலைவில் இது கடந்து விடும். ஆகவே ஆபத்து நேரிடாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.