1895-ல் வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித் தவித்து வந்த தென் தமிழகத்தைக் காப்பாற்றுவதற்காக தன் சொத்துக்களை விற்று முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் இங்கிலாந்து நாட்டை தேர்ந்த கர்னல் ஜான் பென்னிகுக். பொறியாளரான இவர் அணைக் கட்டி முடித்த பின்னர் 1903ல் இங்கிலாந்து திரும்பினார். இந்நிலையில் 1911ம் ஆண்டு மார்ச் 9ம் தேதி பென்னிகுக் மரணமடைந்தார். இவரது கல்லறை இங்கிலாந்தில் சர்ரே மாவட்டத்தில் உள்ள கிம்பர்லி நகர் செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தில் உள்ளது.
கடந்த 2017ம் ஆண்டு இங்குச் சென்ற தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தான பீர் ஒலி என்பவர் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கல்லறையைத் தேடிக் கண்டுபிடித்தார். மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட அந்த கல்லறையைப் புதுப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் அவர் கோரினார். இதைத் தொடர்ந்து இங்கிலாந்து அதிகாரிகள் ஒப்புதலுடன் அந்தக் கல்லறை புதுப்பிக்கப்பட்டது. இதன் பிறகு தமிழகத்தில் இருந்து லண்டன் செல்லும் தமிழக பிரமுகர்கள் பென்னிகுக்கின் இந்த கல்லறை பார்த்து விட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்த கல்லறை பீடத்தை மர்மநபர்கள் சேதப்படுத்தினர். இதுகுறித்து சர்ச் நிர்வாகிகள் போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.