இந்தியாவின் முதல் பெண் இதய சிகிச்சை நிபுணர் என்ற பெருமையைப் பெற்றவர் டாக்டர் பத்மாவதி (103). 1917ம் ஆண்டு பர்மாவில் (இப்போது மியான்மர்) இவர் பிறந்தார். இரண்டாம் உலகப் போரின்போது 1942ல் இவர் இந்தியாவுக்குக் குடியேறினார். ரங்கூன் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்த இவர் பின்னர் வெளிநாட்டில் இதய சிகிச்சைப் பிரிவில் தேர்ச்சி பெற்றார். டெல்லியில் தேசிய இதய சிகிச்சை மையத்தைத் தொடங்கிய இவர் அங்கேயே பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. கடுமையான காய்ச்சலும், மூச்சுத் திணறலும் இருந்ததால் தேசிய இதய சிகிச்சை மையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அவர் காலமானார். இதய சிகிச்சையின் 'தெய்வத்தாய்' என அழைக்கப்பட்டு வந்த பத்மாவதிக்குச் சிறந்த மருத்துவ சேவைக்காக 1967ல் பத்மபூஷன், 1992ல் பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன.