1948ல் இஸ்ரேல் தனி நாடாக அறிவிக்கப்பட்ட போது மத்திய கிழக்கு பகுதியில் உள்ள வளைகுடா நாடுகள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இஸ்ரேலை ஒரு தனிநாடாக அவை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இஸ்ரேலுடன் அனைத்து விதமான உறவுகளையும் துண்டித்தன. ஆனால் 1979ல் எகிப்தும், 1994ல் ஜோர்டானும் இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டன.
இதற்கிடையே வளைகுடா நாடுகளில் முக்கிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தை சமாதானப்படுத்தும் ஒரு திட்டத்தை அமெரிக்கா தீட்டியது. ஐக்கிய அரபு அமீரக நாட்டை இஸ்ரேலுடன் நெருங்க வைத்தால் மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியை கொண்டு வரலாம் என அமெரிக்கா நம்பியது. இந்த முயற்சியில் அமெரிக்கா வெற்றியும் பெற்றது. இதன்படி யுஏஇ மற்றும் இஸ்ரேல் இடையே கடந்த மாதம் அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.
இதையடுத்து இஸ்ரேலை தனிநாடாக யுஏஇ ஏற்றுக்கொள்ளவும் செய்தது. இது தவிர பாதுகாப்பு, ராஜாங்க தொழில்நுட்பம் உள்பட பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட இருநாடுகளும் சம்மதம் தெரிவித்தன. அதுமட்டுமில்லாமல் இஸ்ரேலை புறக்கணிக்கும் வகையில் யுஏஇ இயற்றியிருந்த சட்டத்தையும் ரத்து செய்தது. இந்நிலையில் யுஏஇ, இஸ்ரேல் இடையே வரலாற்றில் முதல் முறையாக நேரடி விமானப் போக்குவரத்து நேற்று தொடங்கப்பட்டது.
இஸ்ரேல் அரசு அதிகாரிகள், அமெரிக்க அதிபரின் நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் இந்த விமானத்தில் பயணம் செய்தனர். இந்த விமானம் சவுதி அரேபியாவின் வான் எல்லை வழியாக அபுதாபிக்கு நேற்று வந்தது. ஒரு இஸ்ரேலிய விமானத்திற்கு யுஏஇ வான் எல்லை வழியாக பறக்க அனுமதி அளிக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.