உலகம் முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பொருளாதார ரீதியாக இந்தியாவிற்கு நிகராக பாதிக்கப்பட்டிருப்பது அமெரிக்காதான்.லட்சக்கணக்கானோர் வேலையில்லாமல் அன்றாட உணவிற்கு கஷ்டப்படுகின்றனர் .அதே நேரத்தில் மத்திய அமெரிக்க பகுதியில் நிறவெறி போராட்டங்களும் நடை பெற்று கொண்டிருக்கின்றன.
இவை இரண்டும் அமெரிக்க கொள்ளையர்களுக்கு புதிய பாதையை காட்டியுள்ளது.அமெரிக்கா முழுவதும் நடைபெற்ற நிறவெறி போராட்டத்தில் வெள்ளையர்களின் கடைகளை சூறையாடிய கொள்ளை சம்பவங்கள் இன்று இந்தியர்கள் பக்கம் திரும்பியுள்ளது.
இந்த வாரத்தில் நார்த் கரோலினா ,டெக்சாஸ் மற்றும் புளோரிடா மாகாணங்களில் நடைபெற்ற பல்வேறு கொள்ளை மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அமெரிக்காவாழ் இந்தியர்களிடையே பீதியை கிளப்பியுள்ளது.நார்த் கரோலினாவில் உள்ள கேர்ரி பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட தமிழரை துப்பாக்கியால் சுட்டதில் அவர் அந்த இடத்திலே பலியானார்.கொலையாளியை தேடும் பணியை துரிதப்படுத்துமாறு நார்த் கரோலினா செனட்டர் வில்லி நிக்கல், கேர்ரி பகுதி காவல்துறையை கேட்டுள்ளார்.கொலைக்கான காரணம் கொலையாளி பிடிபட்டால் தான் வெளிச்சத்துக்கு வரும்.
மேலும் அதே பகுதியில் தமிழர் ஒருவர் தன் கண்ணெதிரே காரை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை விரட்ட முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக கொள்ளையர்கள் அவரை நோக்கி சுட தொடங்கியுள்ளனர்.ஆனால் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் அவர் உயிர் தப்பியுள்ளார்.
கொரோனவால் வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தவர்கள் வெளியே செல்ல நினைத்து நடைப்பயிற்சி மற்றும் மால்களுக்கு போக தொடங்கிய நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்களால் இந்தியர்கள் மீண்டும் வீட்டிற்குள் முடங்க தொடங்கியுள்ளனர். கொள்ளையரகளை எதிர்க்காமல் அமெரிக்க போலீஸ் உதவி எண்ணை (911) தொடர்பு கொள்வதே சாலச் சிறந்தது.