பிரதமர் மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதை டுவிட்டர் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. பிரதமர் மோடிக்கு பிரதமர் அலுவலக டுவிட்டர் பக்கத்தை போலவே, தனிப்பட்ட டுவிட்டர் பக்கம் ஒன்று உள்ளது. இந்த பக்கத்தை கிட்டத்தட்ட 61 மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் பாலோ செய்கின்றனர். மேலும் இந்தப் பக்கம் மோடியின் தனிப்பட்ட வலைத்தளம் (https://www.narendramodi.in/) மற்றும் நரேந்திர மோடி மொபைல் பயன்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கம் ஆகும்.
இதற்கிடையே, இந்தப் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கியதை சில மணி நேரங்களுக்கு முன் டுவிட்டர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக டுவிட்களை பதிவிட்டுள்ளனர். அதில், பிரதமர் நிவாரண நிதிக்கு பிட்காயின் எனப்படும் கிரிப்டோகரன்சி மூலம் பணம் செலுத்தும் படி கூறியிருந்தனர். இதுதொடர்பாக உடனடியாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், பிரதமரின் தனிப்பட்ட பக்கத்தை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுப்பதாக டுவிட்டர் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
மேலும், ``நாங்கள் நிலைமையை தீவிரமாக விசாரித்து வருகிறோம். இந்த நேரத்தில், கூடுதல் கணக்குகள் பாதிக்கப்படுவது குறித்து எங்களுக்குத் தெரியாது” என்று ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த ஜூலை மாதத்தில் இதேபோல் பல பிரபலங்களில் டுவிட்டர் பக்கங்கள் ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா முதல் பல்வேறு பிரபலங்களின் கணக்குகள் முடக்கப்பட்டு, இதேபோல பிட்காயின் விளம்பரத்தை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிட்காயின் செயல்பாடே அதிகரிக்க, இப்படி ஒரு விளம்பர யுக்தியை ஹேக்கர்கள் கையிலெடுத்துள்ளனர் என்கின்றனர் நெட்டிசன்கள்.