இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் இருந்து ரெய்னா விலகியது சர்ச்சைகளுக்கு மேல் சர்ச்சையாக உருமாறி வருகிறது. தன் சொந்த காரணங்களுக்காக விலகினேன் என ரெய்னா கூறியிருந்தாலும், சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் ரெய்னா குறித்து காட்டமாக பேசியிருந்தார். ஆனால் ரெய்னாவோ, `` ``இந்தியா திரும்பியது எனது தனிப்பட்ட முடிவு. இந்த முடிவை என் குடும்பத்தின் நலன் கருதியே எடுத்தேன். அதேவேளையில், சென்னை அணியும் எனது குடும்பம்தான்.
என் தந்தை ஸ்தானத்தில் ஸ்ரீனிவாசனை நான் பார்க்கிறேன். ஸ்ரீனிவாசனை பொறுத்தவரை எப்போதும் என்னுடன் துணை நின்றுள்ளார். என்னை தனது இளைய மகனாகத்தான் ஸ்ரீனிவாசன் கருதுகிறார்" என்று கூறியிருந்தார். இதற்கிடையே தற்போது ரெய்னா பேட்டி குறித்து ஸ்ரீனிவாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதில், ``சுரேஷ் ரெய்னாவை எனது மகன்களில் ஒருவர் போல தான் நான் நடத்தினேன். ஆனால் ரெய்னா மீண்டும் அணிக்குள் திரும்புவாரா இல்லையா என்பது எதுவும் என் கையில் இல்லை. ஒன்று புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் சென்னை அணியை நடத்துகிறோம். நான் அணியின் உரிமையாளர் அவ்வளவே. அணி எங்களுடையது தான். ஆனால், வீரர்கள் எங்களுடைய உரிமை இல்லை.
ரெய்னா மீண்டும் அணிக்குள் வருவதை அணியின் தலைமை நிர்வாகி விஸ்வநாதன் மற்றும் கேப்டன் தோனி ஆகியோர்தான் தீர்மானிப்பார்கள். நான் ஒன்று கேப்டன் கிடையாது. யார் அணியில் விளையாட வேண்டும், யாரை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்பது குறித்து நான் ஒருபோதும் சொன்னது கிடையாது. எங்களிடம் சிறப்பான கேப்டன் இருக்கிறார். அதனால், நான் கிரிக்கெட் விஷயங்களில் தலையிடப் போவதில்லை" என்று கூறியுள்ளார்.