சாலைப் பணிகளுக்காக கையகப்படுத்திய நிலத்திற்கு கூடுதல் நிவாரணத்தொகை ஒதுக்குவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு மறுத்த கலெக்டரின் நடவடிக்கையை கண்டித்து எம்எல்ஏ தலைகீழாக நின்று போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப்பிரதேச மாநிலம் போபால் அருகே உள்ள அடல் என்ற பகுதியில் நெடுஞ்சாலை பணிகளுக்காக அப்பகுதியைச் சேர்ந்தவர்களிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் குறிப்பிட்டதை விட குறைவான தொகையே அவர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏவான பாபு சிங் ஜன்டேலை தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் கூறினர். இதையடுத்து அப்பகுதியினரை அழைத்துக்கொண்டு மாவட்ட கலெக்டரை சந்திப்பதற்காக எம்எல்ஏ பாபு சிங் சென்றார். ஆனால் பல மணி நேரம் காத்திருந்தும் எம்எல்ஏவை சந்திக்க கலெக்டர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து கோபமடைந்த எம்எல்ஏ பாபு சிங், கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே தனது சட்டையை கழட்டி தலைகீழாக நின்று போராட்டம் நடத்தினார். இது குறித்து கேள்விப்பட்ட உடனே அலுவலகத்திலிருந்து வெளியே வந்த கலெக்டர் உடனடியாக எம்எல்ஏவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றார். எம்எல்ஏ தலைகீழாக நின்று போராட்டம் நடத்திய இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.