கொரோனா தடுப்பூசி இன்னும் வெளிவராத நிலையில், அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்படுவதற்கான செயல்திட்டத்தை டிரம்ப் அரசு வெளியிட்டிருக்கிறது.சீன வைரஸ் நோயான கொரோனா அமெரிக்காவில்தான் அதிகமாகப் பரவியிருக்கிறது. அங்கு 65 லட்சம் பேருக்கு மேல் தொற்று பாதித்ததில், 2 லட்சம் பேர் வரை இந்நோயால் உயிரிழந்துள்ளனர். கொரோனா நோயைச் சீனா திட்டமிட்டு உலகம் முழுவதும் பரப்பியிருப்பதாகவும், உலக சுகாதார நிறுவனமும் அதைப் பொருட்படுத்தவில்லை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார்.
இந்நிலையில், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்தியா உள்படப் பல நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றன. அமெரிக்காவில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, 3ம் கட்டப் பரிசோதனையில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இன்னும் ஒரு மாதத்திற்குள் தடுப்பூசி வந்து விடும் என்று கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தில் டிரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவின் சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையும், ராணுவத் துறையும் இணைந்து 2 அறிவிக்கைகளை நேற்று வெளியிட்டன. அதில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. பொதுச் சுகாதாரத் துறையுடன் இணைந்து அதிக அளவில் தடுப்பு மருந்து தயாரிக்கத் திட்டமிட்டு வருகிறோம். அனைத்து அமெரிக்கர்களுக்கும் இலவசமாகத் தடுப்பு மருந்து அளிக்கப்படும். தடுப்பூசி போடும் பணியைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் ராணுவத் துறையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள் உள்பட முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி போடப்படும். ஜனவரி மாதத்தில் அமெரிக்க மக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது என்று அந்த அறிவிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவில் நவம்பர்3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அதனால், தேர்தலுக்கு முன்பு தடுப்பூசி தயாரித்து அளித்து விட வேண்டுமென்று டிரம்ப் விரும்புகிறார். அதற்காக அவர் மருந்து கட்டுப்பாட்டுத் துறை நிபுணர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாகவும், அது தவறான விளைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.