ஜப்பானில் மக்கள் தொகை வேகமாகக் குறைந்து வருவதால் திருமணம் செய்பவர்களை ஊக்குவிக்க 4 லட்சம் பணம் கொடுக்க அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.சீனா, இந்தியா போன்ற நாடுகளில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிறப்பு விகிதத்தைக் குறைக்க இரு நாட்டு அரசுகளும் படாத பாடுபட்டு வருகின்றன. நாம் இருவர் நமக்கு இருவர் என்றது போய் , நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று கூறும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது. சீனாவிலும், இந்தியாவிலும் நிலைமை இப்படி இருக்க, ஜப்பான் நாட்டில் இதற்கு நேர் எதிராக உள்ளது. இங்கு மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க ஜப்பான் அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்ற போதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை.
இதனால் கடைசி முயற்சியாகப் பணம் கொடுத்து திருமணத்தை ஊக்குவிக்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. திருமணம் முன்வருபவர்களுக்கு 4 லட்சம் பணம் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது ஆனால் திருமணம் செய்ய வசதி இல்லாத வருமானத்தில் பின்தங்கி இருப்பவர்களுக்கு மட்டுமே இந்தப் பணம் கிடைக்கும். ஜப்பான் நாட்டு மக்கள் தொகை மற்றும் சமூகப் பாதுகாப்பு அமைப்பு கடந்த 2015ம் ஆண்டு நடத்திய ஆய்வில், ஜப்பானில் 25 வயதுக்கும் 34 வயதுக்கும் இடையே உள்ளவர்களில் 29.1 சதவீதம் ஆண்களும், 17.8 சதவீதம் பெண்களும் போதிய பண வசதி இல்லாததால் திருமணம் செய்யாமல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இதுபோன்று திருமணம் நடத்தப் பணமில்லாமல் அவதிப்படுபவர்களுக்கு 4 லட்சம் பணம் கொடுக்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த திட்டம் அமலுக்கு வர உள்ளது. ஆனால் திருமணம் செய்ய விரும்புவார்களுக்கு வயதுக் கட்டுப்பாடு உள்பட சில நிபந்தனைகள் உண்டு. இருவருக்கும் 40 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும். இருவரது மொத்த வருமானம் 30 லட்சத்திற்குக் கூடக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.