சீனாவின் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 16 பேர் பலியாயினர். சீனாவின் சோங்குயிங் நகருக்கு வெளியே உள்ள சாங் ஜாவோ நிலக்கரிச் சுரங்கத்தில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சாங் ஜாவோ நிலக்கரி சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்படும் நிலக்கரி கன்வேயர் பெல்ட் மூலமாகச் சுரங்க வாயிலுக்குக் கொண்டுவரப்படுகிறது. நிலக்கரி சுரங்க வாயிலுக்குக் கொண்டுவரும் கன்வேயர் பெல்டில் இன்று அதிகாலை திடீரென தீப்பற்றிக் கொண்டது. இதையடுத்து உடனடியாக கன்வேயர் பெல்ட் நிறுத்தப்பட்டது.
ஆனாலும் கன்வேயர் பெல்டில் உள்ள நிலக்கரியில் தீப்பற்றிக் கொண்டது அதனால் சுரங்கம் முழுவதும் கரியமில வாயு நிரம்பியது, கார்பன் மோனாக்சைடு என்ற விஷ வாயுவும் சுரங்கத்துக்குள் சூழ்ந்துகொண்டது. சுரங்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த 16 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் படையினர் ஒரு தொழிலாளியை மட்டும் உயிருடன் மீட்டனர். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.சீனாவில் சுரங்கத் தொழிலில் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது குறிப்பிடத்தகுந்தது.