அமெரிக்காவில் 67 வருடங்களுக்கு பின்னர் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கர்ப்பிணியை கொன்று குழந்தையை வெளியே எடுத்து தன்னுடைய சொந்த குழந்தை என உரிமை கொண்டாடிய அந்த பெண்ணுக்கு டிசம்பர் 8ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
அமெரிக்காவில் 1953ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியன்று தான் கடைசியாக ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. போனி பிரவுன் என்ற அந்தப் பெண்ணுக்கு எதிராக கடத்தல், கொலை உள்பட குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன. விசாரணைக்கு பின்னர் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தொடர்ந்து அமெரிக்காவில் மிசோரியிலுள்ள காஸ் சேம்பர் என்ற இடத்தில் வைத்து போனி பிரவுனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு 67 வருடங்களுக்கு பின்னர் அமெரிக்காவில் மீண்டும் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த லிசா மோண்ட்கோமரி என்ற பெண்ணுக்குத் தான் தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. நிறைமாத கர்ப்பிணியான போபி ஜோ ஸ்டிர்னெட் என்ற பெண்ணை கொலை செய்து அவருடைய குழந்தையை வெளியே எடுத்து தன்னுடைய குழந்தை என்று கூறி இவர் வளர்த்து வந்துள்ளார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததை தொடர்ந்து லிசா மோண்ட்கோமரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த 2004ம் ஆண்டு இந்த சம்பவம் நடந்தது. இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதித்துறை, லிசாவுக்கு மரணதண்டனை விதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. முன்கூட்டியே திட்டமிட்டு செய்த கொலை மற்றும் குற்றத்தின் கொடூரம் ஆகியவற்றை கணக்கிலெடுத்து இந்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித் துறை தெரிவித்துள்ளது.