இலங்கையில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்தபோது விடுதலை புலிகள் அமைப்பு மீது பல்வேறு நாடுகள் தடை விதித்தது. அதில் முக்கியமான நாடு இங்கிலாந்து. விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடைக்கு எதிராக 2018-ல் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கடிதம் அனுப்பியது. இங்கிலாந்தின் உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் எம்.பி.க்கு அனுப்பப்பட்ட அந்த கடிதம், 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் நிராகரிக்கப்பட்டது. எனினும், தடைக்கு எதிராக மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டது.
இங்கிலாந்தில் தடை செய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான சிறப்பு ஆணையத்தில் இந்த மேல்முறையீட்டு வழக்கு நடந்து வந்தது. இந்த வழக்கின் வாதத்தில், புலிகள் இயக்கம் இப்போது பயங்கரவாதம் தொடர்புடையவர்கள் என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் ஏதும் இல்லை என தமிழீழ அரசாங்கம் முறையிட்டது. விசாரணை முடிந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது. மொத்தம் 38 பக்கங்கள் கொண்ட அந்ததீர்ப்பில், விடுதலை புலிகள் இயக்கம் மீதான இங்கிலாந்தின் தடை தவறானது அதிரடியாக கூறப்பட்டது. இதனால் விடுதலை புலிகளுக்கு எதிரான தடை விரைவில் நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.