உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம், கொரோனா பாதித்தவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததால், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் நோய், பல நாடுகளுக்குப் பரவியிருக்கிறது. உயிர்க்கொல்லி நோயான இதன் தாக்கம், அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில்தான் அதிகமாக காணப்பட்டது. அமெரிக்காவில் இது வரை 92 லட்சம் பேருக்கும், இந்தியாவில் 82 லட்சம் பேருக்கும், பிரேசிலில் 55 லட்சம் பேருக்கும் நோய் பாதித்துள்ளது.
இந்நிலையில், உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகளைக் கவனித்து வந்த உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதானோம் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறார். இதை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர், கொரோனா வைரஸ் பாதித்தவருடன் நேரடித் தொடர்பில் இருந்ததால், நானே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.